Advertisment

8 போலீஸ், 30 நாள், ஒரு இரும்பு பெட்டி... திறந்து பார்த்தபோது அதிர்ந்த காவல்துறை..! 

8 police, 30 days, an iron box; Police shocked when opened ..!

ஆலங்குடியில் திறக்கமுடியாத ஒரு இரும்பு பெட்டகத்தைப் பூட்டி சீல் வைத்த கோவை குற்றப்பிரிவு போலீசார், உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் 6 போலீசாரும், ஆலங்குடி போலீசார் 2 பேரும் துப்பாக்கிஏந்தி 30 நாட்களாக காவல் காத்த இரும்பு பெட்டகத்தில் இருந்த பொருளைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி ஆண்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 61). பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.

Advertisment

இவர், கோவையைச் சேர்ந்த ராயல் கேர் மருத்துவமனை விரிவாக்கத்திற்காக அதன் தலைவர் டாக்டர் மாதேஸ்வரனிடம் ரூ. 100 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி அதற்கு கமிஷன் தொகையாக ரூ. 2 கோடி பணமாகவும், ரூ. 85 லட்சத்திற்கு காசோலையாகவும் மொத்தம் ரூ. 2.85 கோடியை முன்பணமாக பெற்றுக்கொண்டு பல ஆவணங்களில் கையெழுத்துகளையும் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில், கோவை மாவட்டக் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கோவை மாநகர துணை ஆணையர் (குற்றம்) பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டார்.

Advertisment

கடந்த ஜூன் மாதம் இறுதியில் நீதிமன்ற உத்தரவு பெற்று சென்னை அடையாறில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டிற்குப் போலீசார் சென்றபோது, போலீசாரை அங்கிருந்த சிலர் திசை திருப்பிய சில நிமிடங்களில் பன்னீர்செல்வம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்ட நிலையில், கடந்த ஜூலை 4ஆம்தேதி முதல் 6ஆம் தேதிவரை புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி ஆண்டிகுளத்தில் உள்ள இரு வீடுகள், அரசு மருத்துவமனை எதிரில் உள்ள அலுவலகம், பண்ணை, பெட்ரோல் நிலையங்களில் தனிப்படை போலீசார் சோதனை செய்தனர்.

சோதனையில் ஏராளமான (பல நூறு கோடிக்கான) நிரப்பப்படாத முத்திரைத்தாள்கள் மற்றும் புரோ நோட்டுகள், காசோலைகள், பல நபர்களுடன் பெற்ற ஒப்பந்த ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. ஆனால், ஒரு இரும்பு பெட்டகம் திறக்க முடியாததால், பெட்டகம் பூட்டு தயாரித்த நிறுவனத்தின் உதவியைப் போலீசார் நாடினார்கள். அவர்களாலும் திறக்க முடியாததால், மும்பையிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களை அழைத்தனர். அதனால் வருவாய் துறையினர் முன்னிலையில்அறைகளைப் பூட்டி சீல் வைத்த போலீசார், சீல் வைக்கப்பட்ட அறைக்கு உதவி ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் கோவை போலீசார் மற்றும் ஆலங்குடி போலீசார் தலா 2 பேர் என மொத்தம் 8 பேர் துப்பாக்கியுடன் கடந்த ஜூலை6ஆம் தேதியில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டு ஜூலை 14ஆம் தேதி மோசடி மன்னன் பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் இருந்த புரோக்கர் செல்வகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த இரண்டு சொகுசு கார்கள், மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சைலேஷ் பிரபாகர் சிங்கர் என்பவர் பெயருக்கு அகமதாபாத் ஆக்சிஸ் வங்கியில் பெறப்பட்டதாக ரூ. 49.85 கோடி மற்றும் ரூ. 49.95 கோடிக்கான போலி வரைவோலையும் கைப்பற்றினார்கள்.

கைது செய்யப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் அவரது கூட்டாளி செல்வகுமார் ஆகிய இருவரையும் கோவைக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, 21ஆம்தேதி நீதிமன்றக் காவலில் எடுத்து ஆலங்குடி அழைத்துவரப்பட்டார். வீடுவரை வந்தவர், பெட்டகம் திறக்க சாவி இல்லை என்று சொன்னதால் போலீசார், பெட்டகம் திறக்கப்பட்டு சோதனை செய்யும்வரை போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

யார் இந்த பன்னீர்செல்வம்?

இந்த பன்னீர்செல்வம் மீது ஏற்கனவே கள்ளநோட்டு மாற்றிய வழக்குகள், கடன் பெற்றுத் தருவதாக கூறி பலரிடமும் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த வழக்குகள் ஆலங்குடி, புதுக்கோட்டை, நமணசமுத்திரம், சென்னை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் வழக்குகள் உள்ளன. மேலும், கள்ளக்குறிச்சி மாணிக்கம் என்பவரிடம் 2 கிலோ தங்கம் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் வாங்கிக்கொண்டு திருப்பி கேட்டபோது ரூ. 5 லட்சத்திற்கு கள்ளநோட்டு கொடுத்து மோசடி செய்த வழக்கும் உள்ளது. இப்படி, தமிழ்நாடு முழுவதும் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

ஆனால், மோசடி செய்து சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்ட சொத்துகளைத் தனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதிவிட்டுமனைவியை சட்டப்படி விவாகரத்து செய்த பன்னீர்செல்வம்,தனது மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்துக்கொண்டே தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டுவருவதாக போலீசார் கூறுகின்றனர். 2013இல் இவருக்குத் துணையாக செயல்பட்ட போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டு பிறகு பணிக்கு வந்துள்ளனர். தனது உயிர் பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசன்ஸ் வாங்கி வைத்திருந்ததை நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளது. சில நீதிமன்றங்களில் சிறை தண்டனை விதிக்கப்பட்டபோது புகார்தாரர்களுக்கு பணம் கொடுத்து சமாதானமாக செல்வதாக நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்திருந்தார்.

இந்த நிலையில் 30 நாட்களுக்குக்குப் பிறகு கோவை மாநகர துணை ஆணையர் (குற்றம்) பார்த்திபன் தலைமையில் தனிப்படை போலீசார், பன்னீர்செல்வம் வீட்டில் உள்ள பெட்டகத்தைத் திறக்க தொழில்நுட்ப வல்லுநர் வாசிம் என்பவரை ரகசியமாக அழைத்து வந்து பெட்டகத்தைத் திறந்து பார்த்தபோது, உள்ளிருந்த பொருளைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பெட்டகத்தில் ஒரு ஜாதகம் மட்டுமே இருந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பை விளக்கிக்கொண்டு சென்றுவிட்டனர். 30 நாட்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாத்தது ஒரு ஜாதகத்தைதானா என்று காவல்துறையினர் அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.

Coimbatore puthukottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe