
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் சாலையூர் நால் ரோட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான சீனிவாசன் தனது மனைவி கலையரசி, மகன் ராமச்சந்திரன், மகள் தனுஸ்ரீ ஆகியோருடன் அதே பகுதியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த மாதம் 26 ஆம் தேதி இரவு சீனிவாசன் வெளியில் சென்றிருந்த நிலையில், வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டிலிருந்த தாய் கலையரசி முன்பு மகன் ரவிச்சந்திரன் மற்றும் மகள் தனுஸ்ரீ கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டில் வைத்திருந்த 5 பீரோக்களை உடைத்து அதிலிருந்த 43 பவுன் நகைகள் மற்றும் பணம் ரூபாய் 18 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேடசந்தூர், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி-கள் துர்காதேவி, கோகுல கிருஷ்ணன், முருகேசன் தலைமையில் 3 தனிப் படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திருச்சி மாவட்ட எல்லையான தங்கம்மாபட்டி சோதனைச் சாவடியில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வேகமாக வந்த இன்னோவா காரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களைப் பிடித்து போலீசார் தங்களுக்கே உரிய பாணியில் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வேடசந்தூர் சாலையூர் நால்ரோடு பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கத்தி முனையில் நகை, பணத்தை கொள்ளையடித்ததும், அடுத்ததாக வாணியம்பாடி பகுதியில் 5 கோடி ரூபாய் ஹவாலா பணத்தைக் கொள்ளையடிக்கச் சென்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சீனிவாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிதாக இடம் வாங்குவதற்காக பூந்தமல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கர் தீனதயாளன் என்பவரிடம் 4 லட்சம் ரூபாய் முன்பணமாகக் கொடுத்துள்ளார்.
சீனிவாசன் வீட்டில் அதிகமான பணம் மற்றும் நகைகள் உள்ளது என்று தீனதயாளன் அவரது தோழி ஜோதிக்கு தகவல் கூறியுள்ளார் அதனைத் தொடர்ந்து ஜோதி தனது நண்பரான சென்னையில் போலீசாக வேலை பார்த்து பணி நீக்கம் செய்யப்பட்ட செல்வக்குமார் என்பவருடன் சேர்ந்து சேலம், நாமக்கல், ஓசூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 பேர் அடங்கிய கூலிப்படையை அமைத்து சீனிவாசன் வீட்டிலிருந்து நகை மற்றும் பணத்தை கத்தி முனையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட செல்வகுமார், ஜோதி, தீனதயாளன், சிராஜுதீன், சதீஷ், சுரேஷ், ரகு, பாஸ்கர் உள்ளிட்ட 8 பேரை வேடசந்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் 21பவுன் தங்க நகைகள், ஒரு கார் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஜோதி என்பவர் போலி பத்திரிகையாளர் அட்டை மற்றும் மனித உரிமைகள் கழக அட்டையும் வைத்துள்ளது தெரிய வந்தது. அதேபோல் தீனதயாளனும் சர்வதேச மனித உரிமைக் கழகத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள 8பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.