
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022 டிசம்பர் 26 ஆம் தேதி மனித கழிவு மிதந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தரப்பிலும் விசாரணை மேற்கொண்டு அறிவியல் பூர்வமான ஆதாரங்களையும் சேகரித்துள்ளனர். தொடர்ந்து, கடந்த ஜனவரி 20 ஆம் தேதி புதுக்கோட்டை தனி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையில், வதந்தியைப் பரப்பி மனிதக் கழிவை கலந்ததாக வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, அதே ஊரைச் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வேங்கை வயல் கிராமத்திற்குள் அரசியல் கட்சியினரோ, அமைப்பினரோ உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக வேங்கைவயலை சுற்றி சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வேங்கைவயல் கிராமத்திற்குள் செல்ல எட்டு பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்தபூவை ஜகன்மூர்த்தி உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் அனுமதித்துள்ளனர். முன்னதாக அவர்களை சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், பின்னர் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)