Skip to main content

கவுன்சிலர் ஆசையில் தம்பதியைக் கட்டிப் போட்டு கொள்ளை... அதிமுக எக்ஸ் கவுன்சிலர் உட்பட 8 நபர்கள் கைது..! 

 

8 arrested, including AIADMK ex-councilor ..!

 

வயதான தம்பதிகளைக் கட்டிப் போட்டு, 45 பவுன் தங்க நகைகளும், 34 காரட் வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அதிமுகவின் முன்னாள் கவுன்சிலர் உட்பட 8 நபர்கள் கைது செய்யப்பட்டு, 40 பவுன் நகைகள் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள குற்றவாளிகளைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

 

8 arrested, including AIADMK ex-councilor ..!

 

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்டது கண்டனூர். இங்குள்ள பங்களா தெருவிலுள்ள பூர்வீக வீட்டினில் மனைவி விசாலாட்சியுடன் வசித்துவருபவர் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியான தட்சிணாமூர்த்தி. இத்தம்பதியின் மகள் மற்றும் மகன்கள் ஆகியோருக்கு திருமணமாகி வெளியூரில் செட்டிலாகிவிட்ட நிலையில், இருவரும் இங்கு தனிமையில் வசித்துவந்துள்ளனர். கடந்த 02/07/2021 அன்று திருமண நிகழ்வு ஒன்றிற்காக சென்னையிலிருந்து கண்டனூருக்கு வந்திருந்த இளைய மகன் அழகப்பன், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பச் செல்கையில், தன்னுடைய மனைவியின் 30 காரட் வைர நகைகள், 17 பவுன் தங்க நகைகளை லாக்கரில் வைக்குமாறு தந்தை தட்சிணாமூர்த்தியிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், 03/07/2021 இரவு 7 மணிக்கு மேல் தட்சிணாமூர்த்தியின் வீட்டிற்குள் புகுந்த முகமூடிக் கும்பல் ஒன்று, தம்பதியைத் தாக்கி கட்டிப்போட்டு ஒட்டுமொத்தமாக அங்கிருந்த தங்கம், வைரம், வெள்ளி மற்றும் ரொக்கப்பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து, "லாக்கரில் வைக்கப்படவிருந்த மருமகளின் நகைகளுடன், மனைவியின் 4 காரட் வைர நகைகள், 28 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி, ரூ. 1.75 லட்சம் ரொக்கம் ஆகியவை முகமூடிக் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது" என சாக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் தட்சிணாமூர்த்தி.

 

8 arrested, including AIADMK ex-councilor ..!

 

முகமூடிக் கொள்ளையர்கள் நம் பகுதியில் இல்லையே? என்கிற முதல் கேள்வியுடன் மாவட்ட எஸ்.பி. உத்திரவின் பேரில், எஸ்.ஐ-க்கள் தினேஷ், ரஞ்சித், பார்த்திபன் உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடியுள்ளது மாவட்ட காவல்துறை. முகமூடிக் கொள்ளையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், மானாமதுரை அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் மூவர் போலீசாரிடம் சிக்க, அவர்களைக் கைதுசெய்து விசாரித்த நிலையில், 8 நபர்களும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 40 பவுன் நகைகளும் மீட்கப்பட்டன. "கொள்ளை நடந்த தட்சிணாமூர்த்தியின் வீட்டின் ஒரு பகுதியில் ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கி, வீட்டின் வேலைகளைப் பார்த்துவந்துள்ளது கைது செய்யப்பட்ட பாக்கியலெட்சுமியின் குடும்பம். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளார் தட்சிணாமூர்த்தி. திடுமென தங்களை அப்புறப்படுத்தியதால் தட்சிணாமூர்த்தி - விசாலாட்சி மீது பாக்கியலெட்சுமிக்கு கடுங்கோபம் இருந்திருக்கிறது.

 

8 arrested, including AIADMK ex-councilor ..!

 

இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் கவுன்சிலரான மஞ்சுளாவுக்கும் நட்பு இருந்துள்ளது. மீண்டும் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட தயாராக இருந்த நிலையில், அதற்கான பணத் தேவைக்காக தட்சிணாமூர்த்தி வீட்டின் அனைத்துப் பகுதிகளையும் அறிந்த பாக்கியலெட்சுமியின் கோபத்தைப் பயன்படுத்திக்கொண்டார் மஞ்சுளா. இதற்காக திட்டம் தீட்டப்பட்டு இஞ்சினியரிங் படிக்கும் மஞ்சுளாவின் மகன் அசோக், அவனுடைய நண்பர்கள் துணைகொண்டு கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளையும் மஞ்சுளாவின் வீட்டினில் புதைத்து, பணத்தை மட்டும் செலவு செய்திருக்கின்றனர். நாளடைவில் சந்தேகம் எழாத நிலையில் நகையை விற்க முயற்சிக்கையில் சிக்கியுள்ளனர். முதற்கட்டமாக 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டு எட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு முதன்மை குற்றவாளியான கெளசிக் என்கின்ற பந்தளராஜனை தேடிவருகிறோம். விரைவில் பிடிபடுவான். அனைத்து நகைகளும் மீட்கப்படும்." என்கின்றனர் தனிப்படை அதிகாரிகள்.