76 lakh rupees fraud for buying a job; Case against former minister Saroja!

சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் 76 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் குணசீலன். இவர் முன்னாள் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜாவின் உறவினர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக சரோஜாவிடம் உதவியாளராக இருந்துவந்தார்.

Advertisment

இந்நிலையில் குணசீலன், கடந்த சில நாள்களுக்கு முன்பு, ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சத்துணவுத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் 76 லட்சம் ரூபாய் வசூலித்துக்கொண்டு, வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் உத்தரவிட்டார். அதையடுத்து காவல்துறையினர், சரோஜா மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

இதையடுத்து, மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.