
புதுக்கோட்டையில் 750 சவரன் நகை காணாமல் போன புகாரில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில் 687 சவரன் நகை திருடப்பட்ட வீட்டின் பின்புறத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கோபாலபட்டணம் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை ஜகுபர் சாதிக் என்பவரது வீட்டில் 750 சவரன் தங்க நகை திருடப்பட்டதாக போலீசில் புகாரளிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக இரண்டு நாட்களாக போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். ஜகுபர் சாதிக் வீட்டின் பின்புற கதவை உடைத்த கொள்ளையர்கள் வீட்டின் மாடியில் வைக்கப்பட்டிருந்த நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக சாதிக்கின் உறவினர்கள் சார்பாகப் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீவிர விசாரணை மேற்கொண்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், உறவினர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. கொள்ளையின் போது கதவை உடைக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடு வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் போட்டிருக்கலாம் எனவே அந்த இரும்பு ராடை கைப்பற்றுங்கள். அது இந்தவழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என சாதிக்கின் உறவினர்களிடன் டிஎஸ்பி நேற்று தெரிவித்துச் சென்ற நிலையில், நேற்றுமுதல் அந்த கிணற்றில் நீர் இறைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இன்று காலை கிணற்றில் உள்ள நீர் முழுவதும் அகற்றப்பட்ட நிலையில் கிணற்றில் ஒரு பிளாஸ்டிக் கவரில் மூட்டை கிடந்தது. அதனை எடுத்துப் பார்த்தபொழுது அதில் 687 சவரன் தங்கநகை இருந்துள்ளது. நகை கண்டெடுக்கப்பட்ட தகவலை போலீசாருக்கு சாதிக்கின் உறவினர்கள் கொடுத்தனர். இது தொடர்பாக மீண்டும் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். திருடப்பட்ட வீட்டின் பின்புறத்திலேயே நகை மீட்கப்பட்ட சம்பவம் அங்கு சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us