75 thousand rupees for government school children who lost their parents in an accident!

Advertisment

விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு 75 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

பொருளாதார வசதியின்றி ஒரு குழந்தை படிப்பை நிறுத்திவிடக் கூடாது என்பதற்காகவும், முழுமையான பள்ளிக்கல்வியை நிறைவுசெய்ய வேண்டும் என்ற நோக்கிலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்திவருகின்றன. இவற்றில், தமிழ்நாடு அரசு, பள்ளி மாணவர்களுக்கு உச்சபட்சமாக 75 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நீண்டகாலமாக செயல்படுத்திவருகிறது.

வருவாய் ஈட்டி வந்த தந்தை அல்லது தாய் ஆகியோரில் ஒருவரோ அல்லது இருவருமோ விபத்தில் உயிரிழந்திருந்தாலோ அல்லது அவர்களால் இனி பொருளீட்ட முடியாது என்ற அளவுக்கு உடல் உறுப்புகள் நிரந்தர முடக்கமாகி இருந்தாலோ அவர்களின் பிள்ளைகள் இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற முடியும். ஒருமுறை மட்டுமே இத்தொகை வழங்கப்படும்.

Advertisment

இந்தக் கல்வி உதவித்திட்டத்திற்கான முதல் அரசாணை (நிலை) எண். 39, நாள்: 30.03.2005. கடந்த 2005ஆம் ஆண்டுதான் முதன்முதலில் இத்திட்டம் அமலுக்கு வந்தது. அப்போது இத்திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

பின்னர் கடந்த 27.11.2014 அன்று மேற்சொன்ன அரசாணை திருத்தப்பட்டு, புதிய அரசாணை (நிலை) எண். 195 வெளியிடப்பட்டது. இந்தப் புதிய ஆணையின்படி, வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் அல்லது நிரந்தர முடக்கம் ஏற்பட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுவந்த கல்வி உதவித்தொகை 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற முடியும்.

Advertisment

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நேரடியாக ரொக்கமாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. தகுதி உள்ள மாணவர்களின் பெயரில் தமிழ்நாடு மின்விசை நிதி கழகத்தில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத்தொகையைக் கொண்டு அவர்களின் கல்வி மற்றும் பராமரிப்புச் செலவினங்களுக்காக பயன்படுத்தப்படும்.

வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் அல்லது இருவரையும் விபத்தில் இழந்த அல்லது அவர்களுக்கு நிரந்தர முடக்கம் ஏற்பட்டிருந்தாலோ அத்தகைய பெற்றோரின் பிள்ளைகள் அவரவர் படித்துவரும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு அந்தந்தபள்ளித் தலைமை ஆசிரியர்கள் அல்லது அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களை நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம்.