ADVERTISEMENT

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு! - இடைக்காலத்தடை கோரிய வழக்குகள் மீது நாளை விசாரணை! 

06:39 PM Jan 04, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகின்றன.


தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சட்டம் கொண்டு வந்தது. இதன் முலம், இந்த ஆண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் 405 அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.


இந்நிலையில், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழக்கும் சட்டத்தை எதிர்த்து, ஷிவானி உள்ளிட்ட சில மாணவர்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.


அந்த மனுவில், ‘தமிழக அரசின் இந்தச் சட்டம், அரசியலமைப்புக்கும் அடிப்படை உரிமைக்கும் எதிரானது. எனவே, இதனை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பான அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.


இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசின் இந்த உத்தரவு என்பது ஒருதலைபட்சமான நடவடிக்கையாகும். இது அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளது.’ எனத் தெரிவித்தார்.


தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதே கோரிக்கையுடன் தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.


இதனையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கிய உத்தரவிற்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள் விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT