/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/999_204.jpg)
நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு கிராமப்புற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் படிப்பது கனவாகவே போனது. அதன் பிறகு தமிழக அரசு கொண்டு வந்த 7.5% உள் இடஒதுக்கீடு கிராமப்புற அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்குச் சிறு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஒரு அரசுப்பள்ளி தொடர்ந்து 4 வது ஆண்டாகச் சாதித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தொடங்கிய காலத்திலிருந்து மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவ கட் ஆப் மதிப்பெண்ணில் தகுதி பெற்றுப் பல மாணவிகள் இன்று மருத்துவர்களாகப் பணியில் உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் பொறியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் எனப்பலதுறை அலுவலர்களாக உள்ளனர்.
இந்த நிலையில்தான் நீட் வந்ததால் +2 வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் கூட கிராமப்புற மாணவிகளால் அதனை எதிர்கொண்டு மருத்துவம் படிக்க முடியாமல் போனது. பல மாணவிகளின் கனவு நிறைவேறாமலேயே போனது. பலமுறை முயன்று மாற்றுப் படிப்புகளுக்குப் போனார்கள். இந்த நிலையில்தான் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்குத்தமிழ்நாடு அரசு 7.5% உள்இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்த முதல் ஆண்டிலேயே கீரமங்கலத்தில் இருந்து ஒரு மாணவன், 4 மாணவிகளுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த ஆண்டு 7 மாணவிகளும் கடந்த ஆண்டு ஒரு மாணவியும் எனக் கடந்த 3 ஆண்டுகளில் 12 மாணவிகள் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டும் ஏராளமான மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இன்று நடந்த மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொண்ட கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சுருதி (457 மதிப்பெண்) மதுரை அரசு மருத்துவக்கல்லூரியிலும், ஜனனி (418 மதிப்பெண்) திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், சுபதாரணி (375 மதிப்பெண்) மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது. ஒரே பள்ளியிலிருந்து 3 மாணவிகள் மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள். இந்தத்தேர்வு முடிவுகளைப் பார்த்து பள்ளி மாணவிகளைத்தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பெற்றோர்கள், எஸ்.எம்.சி நிர்வாகிகள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். தொடர்ந்து 4 ஆண்டுகளாகச் சாதிக்கும் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளையும், தலைமை ஆசிரியர், பாட ஆசிரியர்களையும் பள்ளி நிரவாகத்தினரையும் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)