/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2792.jpg)
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 75 கலை, அறிவியல் கல்லூரிகள் இணைப்புக் கல்லூரிகளாக இணைக்கப்பட்டுள்ளன. தனியார் பல்கலைக்கழகமாக இருந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கடந்த 2013-ம் ஆண்டு அரசு பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.
இப்பல்கலைக் கழகத்தின் நிர்வாக படிநிலையின் அடுத்த கட்டமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 75 கலை, அறிவியல் கல்லூரிகள் இணைப்பு கல்லூரிகளாக தமிழக உயர்கல்வித் துறையால் பல்கலைக்கழகத்தோடு சேர்க்க உத்தரவிடப்பட்டது.
அந்தக் கல்லூரிகளின் இணைப்பு விழா நேற்று முன்தினம் மாலை அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம் சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர் சீத்தாராமன் வரவேற்று பேசினார். இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய பல்கலைக்கழக துணைவேந்தர் ராம கதிரேசன் பேசுகையில், “தமிழக அளவில் 2-ம் இடத்திலும், தேசிய அளவில் 15-வது இடத்திலும் சிறந்து விளங்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், 8 புலங்களும் 55 துறைகளும் உள்ளன. அதன் செறிவார்ந்த வளங்களை இணைப்புக் கல்லூரிகள் சிறப்புடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
இணைக்கப்பட்டிருக்கும் புதிய கல்லூரிகள், தங்களுக்கான பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவது பற்றியும் மேலும் அவற்றிற்கான இணைப்பு நீட்டிப்பு குறித்தும், கல்லூரி வளர்ச்சி கவுன்சில் செயல்பாடுகள் குறித்தும் பல்கலைக் கழகத்தின் கல்லூரி வளர்ச்சி கவுன்சில் முதல்வர் வசந்தராணி, விளக்கினார். பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாடு அதிகாரி பிரகாஷ் பேசுகையில், வழக்கமாகப் பின்பற்றப்படும் தேர்வு நடைமுறைகள் பற்றியும் மாணவர்களின் தரவுகளை கையாள பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் வசதிகளைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_762.jpg)
தொலைதூர கல்வி இயக்குநர் சிங்காரவேலு பேசுகையில், பல்கலைக்கழகம் மற்றும் தற்போது இணைந்துள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் மூலம் சலுகையுடன் பயிலும் வாய்ப்புகள் குறித்து விளக்கினார். பல்கலைக்கழக கல்வி சார்பு இணை இயக்குநர் சிகப்பி கல்விச் செயல்பாடுகள் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 75 இணைப்பு கல்லூரி முதல்வர்களும் கலந்து கொண்டனர். இணைப்புக் கல்லூரிகளுக்கு இணைப்பு விழா சார்பாக துணைவேந்தர் நினைவு பரிசு வழங்கினார். பல்கலைக்கழக புலமுதல்வர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், இணை மற்றும் துணை தேர்வு கட்டுப்பாடு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பல்கலைக்கழக இணை தேர்வு கட்டுப்பாடு அதிகாரி ராஜேந்திரன் நன்றி கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)