
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடலூர் மாவட்ட கரோனா சிகிச்சைக்கான தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள கோல்டன் ஜூபிலி, டைமண்ட் ஜூப்ளி விடுதிகளில் 700க்கும் மேற்பட்டவர்களை தங்கவைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை கரோனா தொற்று பாதிக்கப்பட்டு கோல்டன் ஜூபிலி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகள் 300க்கும் மேற்பட்டடோருக்கு அடிப்படை வசதிகள் இல்லை என போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிக எண்ணிக்கையில் விடுதியில் தனிமனித இடைவெளி இல்லாமல் நோயாளிகள் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள். இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலன் உத்தரவின்பேரில், வட்டாட்சியர் ஆனந்த் மேற்பார்வையில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக், காவல்துறையினர், வருவாய் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், நகராட்சி, பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் முழு முயற்சியாக அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் வளாகத்தில் உள்ள திருவாங்கூர் விடுதியில் 75 அறைகள் கொண்ட 200 படுக்கை வசதிகளுடன் புதிய விடுதி தயார் செய்யப்பட்டுள்ளது.
இதில் நோயாளிகளுக்குத் தேவையான கழிவறை வசதிகள், குடிநீர், மின் விசிறி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இனிமேல் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பெண் நோயாளிகள் வந்தால் அவர்களை திருவாங்கூர் விடுதியில் தங்க வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.