
திருவண்ணாமலையில் நான்கு இடங்களில் ஏடிஎம் உடைக்கப்பட்டு லட்சக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை நகரில் உள்ள மாரியம்மன் கோவில் 10வது தெருவில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி கிளை ஏடிஎம், தேனிமலை பகுதியில் தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஏ.டி.எம், போளூர் பேருந்து நிலையம் எதிரே செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம், கலசப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளி வளாகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள ஒன் இந்தியா ஏடிஎம் என நான்கு இடங்களில் மர்ம நபர்கள் வெல்டிங் மெஷின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
நள்ளிரவில் ஏடிஎம் மையத்தின் உள்ளே சென்று ஷட்டரை மூடி விட்டு கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 70 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொள்ளையடித்த இடத்திலுள்ள கைரேகை மற்றும் வீடியோ பதிவை காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக, ஏடிஎம் இயந்திரம் மற்றும் சிசிடிவி உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்து சென்றுள்ளனர். நான்கு இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்த பின்னர் வெல்டிங் இயந்திரம் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை தீ வைத்து எரித்து சென்றுள்ளனர். இதில் ஏடிஎம் மையத்தில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவை எரிந்து நாசமானதால் திருடர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்ட தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருவண்ணாமலை நகர காவல் நிலைய போலீசார், போளூர் நகர காவல் நிலைய போலீசார், கலசப்பாக்கம் காவல் நிலைய போலீசார் ஏடிஎம் மையத்தின் ஷட்டரை பூட்டி மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.
Follow Us