Skip to main content

70 லட்சம் மோசடி: அதிமுக தொழிற்சங்க நிர்வாகி மீது போலீசில் புகார்!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

70 lakh scam: police filed complaint on AIADMK trade union executive

 

விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரின் மகன் முத்துராமன்(42). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதிமுகவின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்க பிரதிநிதியாகவும் உள்ளார். இவர் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தண்டபாணி வெங்கடேசன் என்பவரிடம் அவரது மகன் சத்யராஜ் என்பவருக்கு மின்சாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 லட்சம் பணம் பெற்றுள்ளார். அப்போது முத்துராமன், வெங்கடேசனிடம் தனக்கு (அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில்) மின்சாரத் துறை அமைச்சரிடம் நேரடியாக பழக்கம் உள்ளது.

 

அவர் மூலம் உமது மகன் சத்யராஜுக்கு மின்சாரத் துறையில் வேலை வாங்கித் தருவது உறுதி என்று கூறி 5 லட்சம் பணம் பேரம் பேசப்பட்டு அதில் மூன்று லட்சம் வெங்கடேசனிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். முத்துராமன் பல மாதங்கள், ஆண்டுகள் கழித்தும் பணி உத்தரவு எதுவும் வெங்கடேசன் மகன் சத்யராஜுக்கு வாங்கித் தரவில்லை. சந்தேகமடைந்த வெங்கடேசன் அவரது வீட்டிற்கு பலமுறை சென்று வேலை வாங்கி கொடு அல்லது பணம் கொடு என்று கேட்டு உள்ளார். அப்போது முத்துராமன் குடும்பத்தினர் வெங்கடேசனிடம் நீ யாரிடம் பணம் கொடுத்தீர்களோ அவரிடம் மட்டும் தான் சென்று கேட்க வேண்டும் எங்கள் வீட்டுப்பக்கம் வரக்கூடாது என்று மிரட்டி அனுப்பியுள்ளார் முத்துராமன்.

 

இதுகுறித்து வெங்கடேசனிடம் விசாரித்தபோது இதேபோல் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் கோலியனூர் சாலை சண்முகசுந்தரம் என்பவரிடம் இருந்து 23 லட்சம், சாலாமேடு ஏழுமலை என்பவரிடமிருந்து சுமார் ஏழரை லட்சம் மற்றும் 2 பவுன் நகை, வெள்ளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரிடமிருந்து 2 லட்சம், விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரிடமிருந்து மூன்று இலட்சம், அலமேலு புரம் சுப்பிரமணியிடம் ரூபாய் 2 லட்சம், பூந்தோட்டம் ராஜப்பன் என்பவரிடமிருந்து மூன்றரை லட்சம் இப்படி பல பேரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை வாங்கிக்கொண்டு முத்துராமன் ஏமாற்றி வருவது தெரியவந்தது. மேலும் தீபாவளி சீட்டு நடத்துவதாகக் கூறி ராகவன் பேட்டை நீலகண்டன், குழந்தைவேல் ஆகிய  இருவர் மூலம் இரண்டு லட்சம் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

 

மோசடி செய்த பணத்தில் தனது மனைவி பெயரில் வீடு, மகனுக்கு ஆடம்பரமாக திருமணம், சொகுசு கார் வாங்கிக் கொண்டு சொகுசாக வாழ்ந்து வருகிறார் முத்துராமன். இதுகுறித்து தமிழக காவல்துறை தலைவரிடம் கடந்த 24.12.2021ஆம் தேதி முத்துராமன் மீது வெங்கடேசன் நேரடியாக புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரையடுத்து முத்துராமன் தலைமறைவாக உள்ளதாக அவரது குடும்பத்தார் கூறி வந்துள்ளனர். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பண மோசடி செய்தவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட என்னைப்போன்ற அனைவருக்கும் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என வெங்கடேசன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிமுக தொழிற்சங்க பிரமுகர், வேலை வாங்கித் தருவதாக சுமார் 70 லட்சம் மோசடி செய்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்