
வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனை தினமும் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து தோகா வழியாக சென்னை வந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது , இரண்டு ஆப்பிரிக்க நாட்டு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களிடம் விசாரணையை கடுமையாக்கினார்கள் சுங்கத்துறை அதிகாரிகள். அந்த விசாரணையின் போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது ஸ்ட்ராலர் பேக்கில் சுமார் 70 கோடி மதிப்புள்ள போதை பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இரண்டு பெண் பயணிகளிடம் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனேவே, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 10 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது . போதைப்பொருள் கடத்தல்காரர்கள், பார்டர் விமானத்தில் தோகா வழியாக 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தி வந்த போது தற்போது பிடிபட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த போதைப் பொருட்கள் கடந்தப்பட்டு வருவது தொடர் நிகழ்வாகவே நடந்து வருகிறது. கடந்த முறை நடந்த ஹெராயின் கடத்தலில் பொறியாளர் ஒருவருக்கு தொடர்பு இருந்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஒப்பந்த விமானங்கள், தோகா துபாய், அபுதாபி , மஸ்கட் ஆகிய வளைகுடா நாடுகளின் நகரங்களிலிருந்து இது வரை 72 கோடி வரை தங்கம் கடத்தி வந்த போது பிடி பட்டனர். மேலும் விமானத்தின் இருக்கைக்கு அடியில் சுமார 18 கிலோ போதைப் பொருளும் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.