arppattam

புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் வசித்து வந்தவர் க. கலைக்குமார் இவர் புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலமைமை ஆசிரியராக பணியாற்றினார். இவரது மனைவி ராஜம் புதுக்கோட்டை, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். தற்போது வேறு பள்ளிகளில் பணியாற்றும் இவர்களது மகள் அபர்ணா(15), மகன் நிஷாந்த்(6) ( 2011 ல்) ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் 2011 மார்ச் 9-ம் தேதி பெற்றோர் பள்ளிக்கு சென்று விட்டனர். தனியார் பள்ளியில் படித்து வந்த அபர்ணா மற்றும் நிஷாந்த் ஆகிய இருவரும் அன்றைய தினம் பிற்பகல் பள்ளிக்கு செல்ல வேண்டியிருந்ததால் காலையில் வீட்டில் இருந்துள்ளனர். காலை சுமார் 10 மணிக்கு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அபர்ணாவை பாலியல் துன்புறுத்தலுடன், ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து அறைக்குள்ளேயே மின்விசிறியில் தொங்கவிட்டதுடன், பீரோவில் இருந்த சுமார் 25 பவுன் நகைகளையும் திருடிச் சென்றதும் தெரியவந்துள்ளது. இது குறித்து கணேஷ்நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

Advertisment

இக்கொலைக்கு தொடர்பிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் கலைக்குமார் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு விசாரணை அலுவலர்களிடம் கொடுத்துள்ளார். அதன்படி நடைபெற்ற போலீஸாரின் அடையாள அணிவகுப்பில் சம்பவத்தின் போது கொலைக் குற்றவாளிகளை பார்த்ததாக கூறப்படும் அபர்ணாவின் சகோதரர் நிஷாந்த் உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலைக்குப்பிறகும் கொலையாளிகள் கைது செய்யப்படாததால் விசாரணையை துரிதப்படுத்தக் கோரி முதலமைச்சருக்கு பெற்றோர் மனு அளித்தனர். இக்கோரிக்கைக்கு ஆதரவாக பல்வேறு கட்சியினர், அமைப்பினர், ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வழக்கின் நிலையில் முன்னேற்றம் இல்லை.

Advertisment

இதையடுத்து வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுகுறித்து விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி 2011 டிசம்பர் 13-ம் தேதி வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற உத்தரவிட்டார்.

arppattam

மாதங்கள் கடந்ததே தவிர புலனாய்வு பிரிவினர் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. இதனால் அபர்ணாவின் தந்தை கலைக்குமார் மீண்டும் விசாரணையை துரிதப்படுத்தக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இதையடுத்து 2012 ஜூலை 13-ம் தேதி விசாரணையை நவம்பர் 2012-க்குள் முடிக்க புலனாய்வு பிரிவுக்கு நீதிபதி மீண்டும் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சிபிசிஐடி ஐஜி மஞ்சுநாதா, டிஐஜி ஸ்ரீதர் ஆகியோர் மீண்டும் புதுக்கோட்டையில் விசாரணை மேற்கொண்டனர். அதில் இவ்வழக்கு மிகவும் சவாலாகவே உள்ளது. உண்மைக் குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று செய்தியாளர்களிடம் புலனாய்வு அலுவலர்கள் கூறினர்.

மதுரை உயர்நீதிமன்றம் விதித்த காலக்கெடுவை கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பதால் புலனாய்வு பிரிவின் மீது நம்பிக்கை இழந்த கலைக்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றகிளையில் முறையிட்டார். இம்மனுவை 2013 செப்டம்பர் 10-ம் தேதி விசாரித்த நீதிபதி இக்கொலைக்கான விசாரணை அறிக்கையை 27-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்புடையதாக கருதப்படும் அதாவது அபர்ணாவை பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்லுபவரான ஆட்டோ ஓட்டுநர் புதுக்கோட்டை கணேஷ்நகர் ராஜ்முகமது மகன் சாகுல்ஹமீது, அபர்ணாவின் அம்மாவை பள்ளிக்கு அழைத்துச் செல்லுபவரான ஆட்டோ ஓட்டுநர் இ. முகமதுஹனீபா, காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கவிவேந்தன், இசைவேந்தன் மற்றொருவர் சின்ராஜ் ஆகியோர் செப். 26-ம் தேதி நீதிமன்ற சம்மன் மூலம் புதுக்கோட்டை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி முன்பு ஆஜராகி, வாக்கு மூலம் அளித்துவிட்டுச் சென்றனர். அதன்பிறகு செப். 27-ம் தேதி நடைபெற்ற விசாரணையில் இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ வசம் சிபிசிஐடி போலீஸார் ஒப்படைத்தனர்.

அதன்பிறகு சிபிஐ கண்காணிப்பாளர் ஹபீஸ்சிங் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை (2013 டிச.17) மாணவியின் பெற்றோரான கலைக்குமார், ராஜம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதில் இக்கொலை தொடர்பாக சந்தேகிக்கும் நபர்கள் குறித்தும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

அதன் பிறகு பல முறை சிபிஐ புலனாய்வு பிரிவினர் நேரடி விசாரணை மேற்கொண்டும் இதுவரை மாணவி அபர்ணாவை கொன்ற உண்மை கொலையாளிகளை கைது செய்யவில்லை.

7 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மாணவி கொலைக்கு நீதி வேண்டும் என்று அவரது பெற்றோருடன் உறவினர்களும் சட்டப்படி போராடியும் இதுவரை நீதி கிடைக்கவில்லை.

அதனால் அபர்ணாவின் வன்கொலைக்கு நீதி வேண்டும். கொலையாளிகள் அரசியல் பின்புலம் உள்ளவர்கள் என்பதால் நீதி மறுக்கப்படுகிறது. அதனால் அரசியல் கட்சிகளும் தங்கை அபர்ணாவுக்காக நீதி கேட்க போராட முன்வர மறுக்கிறார்கள். அதனால் காலம் கடந்தாலும் நீதி வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம் என்று அவர் சார்ந்துள்ள ஜாதி அமைப்பினர் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் அறிவித்தனர்.

அறிவித்தபடி புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் காலை முதலே போராட்டக்காரர்கள் கூடி ஆர்ப்பாட்டம் தொடங்கிய நிலையில் அவர்களை போலிசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நிலையிலும் எங்களை எத்தனை முறை கைது செய்தாலும் கொலையாளிகளை கைது செய்யும் வரை போராட்டம் செய்வோம். இன்று புதுக்கோட்டையில் தொடங்கிய போராட்டம் அடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் என்றனர்.

உயர்ந்த விசாரனை பிரிவான சி.பி.ஐ. கூட அபர்ணாவின் கொலை குற்றவாளிகளை கைது செய்ய ஏன் தயக்கம் காட்டுகிறது. எந்த சக்தி தடுக்கிறது. என்ற கேள்வி புதுக்கோட்டை மக்களிடம் எழுந்துள்ளது.