கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ள குருபரபள்ளி அருகே இன்று (20.07.2025) 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 4 பேர் பலியாகி உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அரசு பேருந்து அதன் பின்னால் வந்த  சரக்கு வாகனம் ஒன்று, அதன் பின்னால் அடுத்தடுத்து 2 கார்கள் மற்றும் ஒரு லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. அதே சமயம் 2 சக்கர வாகனத்தில் வந்த கணவன், மனைவி மற்றும் அத்தம்பதியரின் மகன் என 3 ஆகிய மூன்று பேர் வந்துள்ளனர். 

இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் வந்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர். மேலும் லாரி ஓட்டுநர் ஒருவரும் பலியாகி உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், விபத்தில் சிக்கி  படுகாயம் அடைந்தவர்கள் அனைவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டனர். கிருஷ்ணகிரி - ஓசூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் கடந்த ஒரு வருட காலமாகவே  அடிக்கடி இது போன்ற விபத்து ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து 7 வாகனங்கள் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.