Skip to main content

பெருமாள் கோயிலில் 7 சாமி சிலைகள் திருட்டு; காவல்துறை விசாரணை!        

Published on 23/05/2023 | Edited on 23/05/2023

 

7 Swami idols stolen from Perumal temple in Salem

 

தாரமங்கலத்தில், நூறு ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயிலில் 7 சாமி சிலைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.     

 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் கண்ணனூர் மாரியம்மன் கோயில் அருகில் நூறு ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில் உள்ளது. இந்தக்  கோயிலில் கிருஷ்ணன், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடன், நடராஜன், ஆஞ்சநேயர் ஆகிய கடவுளர் சிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் சராசரியாக அரை அடி உயரமுள்ளவை.     

 

எம்ஜிஆர் காலனியைச் சேர்ந்த குமரவேல் (54) என்பவர், இந்தக் கோயிலில் பூசாரியாக உள்ளார். ஊரின் மையப் பகுதியில் கோயில் அமைந்துள்ளதால் எப்போதும் கோயில் அருகே மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். மே 20 ஆம் தேதி மாலையில் கோயில் பூசாரி வழக்கம்போல் கோயிலைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். மறுநாள் காலையில் அந்த வழியாகச் சென்ற ஊர்க்காரர்கள் சிலர், கோயிலின் வெளிப்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து தாரமங்கலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.  மர்ம நபர்கள் கோயில் கதவை உடைத்து உள்ளே இருந்த 7 சாமி சிலைகளைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.     

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். உள்ளூரைச் சேர்ந்த சிலருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கோயில் பூசாரி மற்றும் அன்றாடம் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்