ஒரே அரசு பள்ளியில் படித்த 7 மாணவிகள் மருத்துவராகிறார்கள்.... ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு குவியும் பாரட்டுகள்!

7 students who studied in the same government school become doctors

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவப் படிப்பிற்கான சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு தொடங்கியதும் நீட் தேர்வில் 514 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் அரசுப் பள்ளி மாணவன் சிவா சென்னை எம்.எம்.சி மருத்துவக்கல்லூரியை தேர்வு செய்துள்ளார்.

தொடர்ந்து நடந்த கலந்தாய்வில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து கலந்து கொண்ட சுமார் 35 மாணவ, மாணவிகளில் 25 மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ் படிக்கவும், 6 மாணவ, மாணவிகள் பி.டி.எஸ் படிக்கவும் தேர்ந்தெடுத்துள்ளனர். கடந்த ஆண்டு 18 மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்கச் சென்ற நிலையில் இந்த ஆண்டு 31 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பிற்குச் செல்கின்றனர். இதில் வழக்கம் போல அறந்தாங்கி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளே அதிகம்.

7 students who studied in the same government school become doctors

ஒரே பள்ளியில் 7 மாணவிகள் மருத்துவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் +2 படித்த மாணவிகளில் 7 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் இன்று நடந்த மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இதில் தீபிகா மதுரை அரசு மருத்துவக்கல்லூரி, வாலண்டினா தேனி அரசு மருத்துவக்கல்லூரி, கனிகா புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி, சுவாதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி, யமுனா திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர். மேலும் நிஷாலினி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி என ஒரே பள்ளியில் படித்த 6 மாணவிகளும் எம்.பி.பி.எஸ் படிக்க தேர்வாகி உள்ளனர். மேலும் நிஷா என்ற மாணவிக்கு திருநெல்வேலி பல் மருத்துவக் கல்லூரியிலும் படிக்க தேர்வாகி உள்ளனர்.

குவியும் பாராட்டுகள்

இதே போல கடந்த ஆண்டு கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 4 பேர் மருத்துவம் படிக்க தேர்வாகி பல்வேறு மருத்துவக்கல்லூரிகளில் படித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தான் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள் என்ற பெருமை பெற்றுள்ளது. தொடர்ந்த இரண்டு வருடங்களில் 11 மாணவிகளை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்ப பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி பாராட்டி பொன்னாடைகள் அணிவித்தார்.

தொடர்ந்து மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பாராட்டி பொன்னாடை அணிவித்தார். தொடர்ந்து பேசும் போது, தந்தை பெரியார் கண்ட கனவை நினைவாக்கி இருக்கிறார்கள் மாணவிகள் என்றார். அதே போல் மாணவர்கள் பேசும் போது, வறுமையான குடும்ப சூழ்நிலையில் படித்தோம். ஆடு மேய்க்கும் அப்பா கூலி வேலை செய்யும் தாய். பெண்பிள்ளைக்கு படிப்பு எதற்கு என்ற உறவுகளின் பேச்சை கேட்காமல் படிக்க வைத்ததால் இன்று இதனை அடைந்துள்ளோம் தெரிவித்தனர். எனது நெய்வத்தளி கிாமத்தில் முதல் மருத்துவர் என்ற பெருமை எனக்கு கிடைத்திருக்கிறது என்றால் ஒரு மாணவி. பெற்றோர்களும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிகிறது.

Pudukottai
இதையும் படியுங்கள்
Subscribe