/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/995_179.jpg)
கடலூர் மாவட்டம் சேலம் சாலையில் உள்ள அடரி பகுதியில் வசித்து வந்தவர் அழகேசன். இவர் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சொந்த வேலை காரணமாக தனது குடும்பத்தினருடன் வீட்டைப்பூட்டி விட்டு விருத்தாசலம் சென்றுள்ளார். அங்கு வேலையை முடித்துக் கொண்டு மதியம் வீட்டுக்கு வந்த அழகேசன் வீட்டின் பூட்டைத்திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்திருந்த ஏழரை பவுன்நகை மற்றும் வெள்ளிபொருட்கள் களவாடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பூட்டிய வீட்டுக்குள் கொள்ளை நடந்தது குறித்து உடனடியாக சிறுபாக்கம் காவல்நிலையத்திற்கு அழகேசன் தகவலளித்தார். போலீசார் விரைந்து வந்து அழகேசன் வீட்டை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பெயரில் திட்டக்குடி டிஎஸ்பி காவியா, வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் சந்திரா, பயிற்சி சப் இன்ஸ்பெக்டர் நித்தியா, காவலர்கள் தெய்வநாயக,ம் அருள், திரிசங்கு ஆகியோர் கொண்ட குழு, வீடு புகுந்து கொள்ளை நடத்தியவர்களைத்தீவிரமாகத்தேடி வந்தனர். மேலும், கொள்ளை நடந்த வீட்டுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருவம் அருகே போலீஸ் குழு சென்று விசாரணை நடத்திய போது, அப்பகுதியில் நடமாடிய பர்தா அணிந்தபெண்ணிடம் விசாரணை நடத்தினர். அவர் பெரம்பலூர் மாவட்டம் லப்பைகுடிக்காடு பகுதியைச் சேர்ந்த கலீல்பாஷா என்பவரது மனைவி 33 வயது சம்சாத் பேகம் என்பதும், அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், அழகேசன் வீட்டில் ஏழரை சவரன் நகை மற்றும் வெள்ளிப் பொருட்களைக்களவாடியதை ஒப்புக்கொண்டதோடு, அவரிடம் இருந்த அந்தப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பூட்டப்பட்டவீட்டில் எப்படிக் களவாடினார் என்பது குறித்து போலீசார் கேட்டபோது, அவர்கள் வீட்டைப் பூட்டிவிட்டு அதன் சாவியை அருகில் ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றதை நான் தூர இருந்து கவனித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் சென்ற பிறகு அந்தச் சாவியை எடுத்து வீட்டைத் திறந்து நகைகளைத்திருடிக்கொண்டு மீண்டும் சாவி இருந்த இடத்தில் வைத்துவிட்டுக் கிளம்பிவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். பட்டப்பகலில் அரசு ஊழியர் வீட்டில் அவரது வீட்டுச் சாவியைக் கொண்டு பெண் ஒருவர் நகைகளைக் களவாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)