Advertisment

7 தமிழர் விடுதலை தாமதம்: அறத்தின்படி ஆளுனர் விளக்கமளிக்க வேண்டும்! ராமதாஸ்

ramadoss

7 தமிழர் விடுதலையில் தாமதம் குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய கடமை ஆளுனருக்கு சட்டப்படி இல்லை என்றாலும் அறத்தின்படி உள்ளது. அந்தக் கடமையை தமிழக ஆளுனர் மதித்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் 138 நாட்கள் ஆகியும், அவர்களின் விடுதலை இன்னும் சாத்தியமாகவில்லை. 7 தமிழர்கள் விடுதலை விவகாரம் குறித்து முடிவெடுப்பதில் எந்த காரணமும் இல்லாமல் ஆளுனர் மாளிகை தாமதம் செய்வது வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது.

Advertisment

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 9&ஆம் தேதி தமிழக அமைச்சரவை நிறைவேற்றி தமிழக ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. இந்த விஷயத்தில் முடிவெடுக்கத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தீர்மானத்துடன் இணைத்து தமிழக அரசு அனுப்பியிருந்தது. இத்தனைக்குப் பிறகும் இவ்விஷயத்தில் ஆளுனர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு இம்மியளவுக்குக் கூட நியாயமான காரணங்கள் இல்லை.

முதலாவதாக 7 தமிழர்களையும் விடுதலை செய்வதில் இருந்த அனைத்து தடைகளையும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6&ஆம் தேதியன்று அளித்தத் தீர்ப்பில் தகர்த்த உச்சநீதிமன்றம், அவர்களை விடுதலை செய்ய தமிழக ஆளுனருக்கு அதிகாரம் உண்டு என்றும், அது தொடர்பான விண்ணப்பங்களை அரசியலமைப்புச் சட்டத்தின் 161&ஆவது பிரிவின் கீழ் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. அதன்படி தான் தமிழக அரசும் ஆளுனருக்கு பரிந்துரைத்தது.

இரண்டாவதாக, 7 தமிழர்கள் விடுதலை குறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி விளக்கமளித்த ஆளுனர் மாளிகை,‘‘ 7 தமிழர்கள் விடுதலை குறித்து மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தவில்லை. எனினும் இந்த வழக்கு மிகவும் சிக்கலானது என்பதால் தேவையான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. அவற்றின் அடிப்படையில் அரசியலமைப்புச் சட்டப்படி நியாயமான, நேர்மையான முடிவுகள் எடுக்கப்படும்’’ என்று கூறியிருந்தது. 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான வழிமுறைகள் குறித்து அரசியலமைப்பு சட்டத்தில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருந்தும், இத்தகைய விளக்கமளித்து 132 நாட்களாகும் நிலையில், 7 தமிழர்களை விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுனரால் இன்னும் முடிவெடுக்க முடியவில்லை என்பதை தமிழ்நாட்டு மக்களால் நம்ப முடியவில்லை.

மூன்றாவதாக, 7 தமிழர்கள் விடுதலைக்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்தது ராஜிவ் கொலையின் போது உயிரிழந்தவர்கள் சிலரின் குடும்பத்தினர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு தான். ஆனால், 7 தமிழர்களுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்படி எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அதனால், 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிரான எதிர்ப்பும் செல்லாததாகி விட்டது. அதனால் ஆளுனர் உடனடியாக முடிவெடுத்து 7 தமிழர்களை விடுவித்திருக்கலாம். ஆனால், ஆளுனர் அவ்வாறு செய்யவில்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகள் ஆகி விட்டன. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 2000-ஆவது ஆண்டு முதலில் எழுப்பப்பட்டது. ஆனால், அப்போதிருந்த திமுக அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. அதன்பின் 2008-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நீதியரசர் கிருஷ்ணய்யர் கடிதம் எழுதினார். தமிழகத்தின் எதிர்பார்ப்பும் அதுவாகவே இருந்தது. ஆனால், அப்போதும் ஆட்சியிலிருந்த திமுக அக்கோரிக்கையை ஏற்கவில்லை. அண்ணா நூற்றாண்டு விழா கடந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு முடிந்தும் அவர்கள் விடுதலை செய்யப்பட வில்லை என்பதைப் பார்க்கும் போது, தமிழர்கள் என்பது தான் அவர்கள் விடுதலைக்கு தடையோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி 7 தமிழர்களை விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுனர் முடிவெடுக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மை தான். ஆனால், அவர்களை விடுதலை செய்ய ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் நிலையில், இந்த ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு விடுதலையை ஆளுனர் தாமதிப்பது முறையல்ல. 7 தமிழர் விடுதலையில் தாமதம் குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய கடமை ஆளுனருக்கு சட்டப்படி இல்லை என்றாலும் அறத்தின்படி உள்ளது. அந்தக் கடமையை தமிழக ஆளுனர் மதித்து செயல்பட வேண்டும்.

அனைவருக்கும் பொதுவானவர்; நடுநிலையானவர் என்று தம்மைப் பற்றிக் கூறிக்கொள்ளும் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அதை 7 தமிழர்கள் விடுதலை விஷயத்தில் மெய்ப்பிக்க வேண்டும். எனவே, இனியும் தாமதிக்காமல் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆளுனர் ஆணையிட வேண்டும்.

governor issue 7 Tamils release Ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe