
கோவையைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இது குறித்து சிறுமியின் பாட்டி உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமி குறித்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து புகார் அளிக்கப்பட்ட மறுநாளே காணாமல் போன சிறுமி வீடு திரும்பி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அதிர்ச்சி தகவல் வெளியானது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் சமூக வலைத்தளம் மூலம் தனக்குப் பழக்கமான 7 இளைஞர்கள் குனியமுத்தூர் பகுதிக்கு வரவழைத்தனர். அங்கு அறை எடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உக்கடம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 7 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 17 வயது சிறுமி ஒரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.