Skip to main content

வங்கதேசத்தை சேர்ந்த 7 பேர் கைது... கடலூரில் மத்திய உளவுத்துறை விசாரணை!

Published on 02/07/2021 | Edited on 02/07/2021

 

7 Bangladeshi arrested in Cuddalore

 

கடலூரில் வங்கதேசத்தினரிடம் மத்திய உளவுத்துறை விசாரணை நடைபெற்றுவருவது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் நகரத்தை ஒட்டி பெரியகங்கணாங்குப்பம் என்ற ஊராட்சிப் பகுதியில் ஒரு வீட்டிற்கு சர்வதேச அழைப்பு தொடர்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தச் சர்வதேச அழைப்பின் காரணமாக உளவுத்துறை மற்றும் மத்திய உளவுத்துறை கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. வங்கதேசத்திலிருந்து அடிக்கடி அந்த தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அந்த தொலைபேசி உரையாடல் சந்தேகப்படும் விதமாக இருப்பதாகவும், இதன் காரணமாக மத்திய உளவுத்துறை ஓராண்டாக பெரியகங்கணாங்குப்பத்தில் இருக்கும் வங்கதேசத்தைச் சேர்ந்த 7 பேர்களிடம் விசாரித்துவருகின்றனர். ஆனால் இந்தச் சுற்றுவட்டார பகுதி இவர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை. இவர்களுடைய மொழி புரியாது என்பதால் இந்தப் பகுதியைச் சேர்ந்த யாருக்கும் இவர்களைத் தெரியவில்லை.  பெரியகங்கணாங்குப்பம் செல்வவிநாயகர் நகரில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டுவருகின்றனர்.

 

அந்தக் குறிப்பிட்ட வீட்டைச் சுற்றியும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களுடன் முறையாக வந்து தங்கியுள்ளார்களா என பல்வேறு விதமான கோணங்களில் உளவுத்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவர்களின் செல்ஃபோன் உள்ளிட்ட பல ஆவணங்களை அவர்கள் ஆய்வுசெய்ததாக கூறப்படுகிறது. மத்திய உளவுத்துறையின் விசாரணை என்பதால் இது என்ன மாதிரியான விசாரணை என்பது குறித்து கடலூர் போலீசார் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். ஆனால் மத்திய உளவுத்துறையின் சார்பில், சர்வதேச அழைப்புகள் வந்ததால் விசாரணை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்