7 arrested for two wheeler theft 31 vehicles confiscated!

Advertisment

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகனங்கள் திருடுபோவது குறித்து காவல் நிலையங்களுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

அதையடுத்து பண்ருட்டி காவல் கோட்டத்தில் இருசக்கர வாகன திருடர்களை கண்காணித்து, பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின்பேரில், பண்ருட்டி துணைகாவல் கண்காணிப்பாளர் பாபு பிரசாந்த் வழிகாட்டுதலில், பண்ருட்டி காவல் ஆய்வாளர் வீரமணி மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் தவச்செல்வம், ஆனந்தன், தீபன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்தத் தனிப்படையினர் நெல்லிக்குப்பம், காடாம்புலியூர், புதுப்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர். போலீசார் நேற்று நெல்லிக்குப்பத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

Advertisment

விசாரணையில் அவர்கள் மூன்று பேரும் இருசக்கர வாகன திருடர்கள் எனத் தெரியவந்தது. இவர்களுடன், மேலும் நான்கு பேர் சேர்ந்து நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விழுப்புரம், கடலூர் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து பண்ருட்டி மேலப்பாளையம் பாபு மகன் நீலகண்டன்(26) மற்றும்தேவநாதன் மகன் மோகன்(25), கோவிந்தசாமி மகன் தங்கராசு(32), பாண்டுரங்கன் மகன் செந்தில்குமார்(43), புதுப்பேட்டை புண்ணியமூர்த்தி மகன் வெங்கடேசன்(33), சேடபாளையம் அந்தோணி மகன் எழிலரசன்(19), ராஜபேட்டை இளவரசன்(22) ஆகிய 7 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், இவர்களிடமிருந்து 31 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

Ad

இந்நிலையில், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்குச் சென்ற கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்த காவல்துறையினருக்குபாராட்டுத் தெரிவித்தார். மேலும், "இருசக்கர வாகனங்கள் திருடுபவர்கள் மட்டுமல்லாது, திருட்டு வாகனங்களை வாங்குபவர்களும் குற்றவாளிகள் ஆவார்கள்" எனக் கூறினார்.