Skip to main content

68 ஆண்டுகளைக் கடந்த பழமை வாய்ந்த நூலகத்திற்கு புதிய கட்டடம்!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
68 years old library in Chidambaram gets new building at Rs 48 lakh
கோப்புப்படம்

சிதம்பரம் நகரத்தின் 68 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த  காசு சிதம்பரம் கிளை நூலகம் முதலில் காசுகடைத்தெரு, பின்னர் சின்ன காஜியார் தெருவில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அந்தக் கட்டிடம் பழுது ஏற்பட்டு மழைக்காலங்களில் மழை நீர் ஒழுகி பல லட்ச எண்ணிக்கையில் இருக்கும் புத்தகங்கள் வீணாகும் சூழல் ஏற்பட்டது. மேலும், நூலகத்திற்கு ஏற்ற சரியான இடவசதி இல்லாததால் நூலகத்தை அரசு இடத்தில் நவீன முறையில் அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை தொடந்து 2014-ல் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தற்போது மாநில செயலாளராக இருக்கும் கே. பாலகிருஷ்ணன் அதே நேரத்தில் சிதம்பரம் நகர மன்றத் தலைவராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த பெளஜியா பேகம் இருந்த போது, நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே நகராட்சிக்கு சொந்தமான  4 ஆயிரம் சதுர அடி காலி இடத்தை நூலகம் கட்டுவதற்கு இலவசமாக தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார். அதனடிப்படையில் அப்போதிருந்த நகர்மன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் தீர்மானத்தின் பெயரில் 2014- ஆம் ஆண்டு நூலகம் கட்ட 4 ஆயிரம் சதுர அடி இடம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிளை நூலகமாக செயல்பட்ட நூலகம், வருவாய் கோட்ட நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில்  நூலகம் கட்ட அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால், நூலகம் கட்டமுடியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன் சிதம்பரம் சார் ஆட்சியராக பணியாற்றிய மதுபாலன் சிதம்பரத்தில் நவீன முறையில் நூலகம் அமைய வேண்டும் என்ற நோக்கில் நமக்கு நாமே திட்டம் மூலம் சிதம்பரம் பகுதியில் உள்ள வணிகர்கள் சங்கம், நகை வியாபாரிகள் சங்கம், பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து நூலகம் கட்டுவதற்கு மக்கள் பங்களிப்பு நிதியாக ரூ 16 லட்சம் நிதி திரட்டினார் .பின்னர் அவர் பணி உயர்வு பெற்று மதுரைக்கு சென்றுவிட்டார். 

இதனை தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுக்கு முன் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நூலகம் கட்ட நமக்கு நாமே திட்டத்தில் ரூ 32  லட்சம் மாணியமாக அரசு வழங்கியதால் மொத்தம் ரூ 48 லட்சத்தில் 1800 ச.அடியில் நூலகத்திற்கு தரைதளம் நவீன முறையில் கட்டப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த 5-ந்தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நூலகத்தை திறந்து வைத்தார். இதனையொட்டி நூலகத்திற்கான சாவியை சம்பந்தபட்ட நூலகத்துறை ஆலுவலர்கள் அருள் மற்றும் ரகுநந்தனிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதிய நூலக கட்டிடத்தில் ஜன 12-ந்தேதி மாலை நடைபெற்றது.

இதில் சிதம்பரம் நகர் மன்ற தலைவர் கே.ஆர் செந்தில்குமார் கலந்து கொண்டு நூலக சாவியை வழங்கினார். நகர்மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன், நகராட்சி ஆணையர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், நகர் மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், ராஜன், கல்பனா மற்றும் திமுக நகர துணைச்செயலாளர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள், நகராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.  

சார்ந்த செய்திகள்

Next Story

“கையில் புத்தகங்கள் தவழட்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Let the books creep in the hand says Chief Minister MK Stalin

மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் சபையான யுனெஸ்கோ சார்பில் உலக புத்தக தினம் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உலக புத்தக தின வாழ்த்துச் செய்தியை தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “புதிய உலகத்திற்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்திற்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை. அதனால் புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன். கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்றதிலிருந்தும் 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் தன்னைச் சந்திக்க வருபவர்கள், பூங்கொத்துகள், பொன்னாடைகளைத் தவிர்த்து அன்பின் பரிமாற்றத்திற்கு அடையாளமாக புத்தகங்களை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி தன்னைச் சந்திக்க வந்த பலரும் வழங்கிய ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நூலகங்களுக்கும், புத்தகங்கள் கோரிக் கடிதம் அளித்தவர்களுக்கும், அமைப்புகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

''அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்''-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
 'Who will go missing will be known after June 4'-Edappadi Palaniswami speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரியலூரில் நடைபெற்று வரும் பிரச்சாரக் கூட்டத்தில் சிதம்பரம் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், ''எங்களை மிரட்டி பார்க்கும் வேலையெல்லாம் வேண்டாம். அதிமுக என்ற கட்சி அதிக தொண்டர்களைக் கொண்டது. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போய் உள்ளனர். எங்களைச் சீண்டி பார்க்காதீர்கள். அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என அதிமுக தொண்டர்கள் காட்டுவார்கள்.

வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால் சிலர் எதை எதையோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுக என்றைக்கும் பயப்படாது. அதிமுகவை அழிக்க நினைத்த சிலர் தற்போது பழத்தை தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.  உண்மையில் யார் காணாமல் போவார்கள் என்பது ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு தெரியவரும். அண்மையில் பார்த்தால் திமுக அயலக அணி துணை அமைப்பாளர் என்ற திமுக நிர்வாகி இரண்டு ஆண்டு காலமாக வெளிநாட்டுக்கு போதைப் பொருளை கடத்தி கொண்டிருக்கிறார். நீங்களே பாருங்கள்'' என முதல்வருடன் ஜாபர் சாதிக் எடுத்த புகைப்படத்தைக் காட்டினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் உடன் ஜாபர் சாதிக் இருக்கும் புகைப்படத்தையும் காட்டினார்.

பின்னர் மீண்டும் பேச தொடங்கிய எடப்பாடி, ''முதலமைச்சரோடு நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். பின்னர் விளையாட்டுதுறை அமைச்சருடன் நெருக்கமாக போட்டோ எடுத்துள்ளார். போட்டோ எடுத்துக் கொள்ளட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் வரும்போது கூட நிறைய போட்டோ எடுத்தாங்க. ஆனால் அவருடைய கட்சி நிர்வாகி, பொறுப்பில் உள்ள நிர்வாகி போட்டோ எடுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துள்ளார்கள். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்திய ஆசாமிக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என மக்கள் கேட்கிறார்கள். மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை முதல்வருக்கும் விளையாட்டுதுறை அமைச்சருக்கும் இருக்கிறது.

ஆறு மாதத்திற்கு முன்பு திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் 'நான் இரவில் படுத்து தூங்கி காலையில் கண்விழித்து பார்க்கும் பொழுது என்னுடைய கட்சிக்காரர்களால் என்ன பிரச்சனை வந்து விடுமோ என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன்' என்கிறார். இதை நான் சொல்லவில்லை திமுக தலைவர் சொல்கிறார். அப்படி என்றால் அந்தக் கட்சியினர் எப்படி அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை அவரே சொல்லிவிட்டார். நாம் சொன்னால் கூட வேண்டுமென்று எதிர்க்கட்சி குற்றம் சுமத்துகிறார்கள் என்று சொல்வார்கள். ஆனால் திமுக தலைவரே அவருடைய கட்சிக்காரர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்துள்ளார். மக்களுக்கு எதிரான திட்டங்களை பாஜக கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திறன் அதிமுகவிற்கே உள்ளது. ஆனால் அதேநேரம் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தால் பாராட்டவும் செய்வோம். எதிர்க்கும் போது எதிர்ப்போம்; பாராட்டும் போது பாராட்டுவோம் என்பதே அதிமுகவின் ஸ்டைல். கூட்டணியை நம்பி அதிமுக தேர்தலைச் சந்திக்கவில்லை. மக்களை நம்பியே இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். கூட்டணியிலிருந்த வரை பாஜகவிற்கு விசுவாசமாக இருந்தோம். தற்பொழுது விலகி விட்டோம். பாஜகவை எதிர்க்கவில்லை என்கின்றனர், அதற்காக என்ன பாஜகவினரைச் சுட்டா வீழ்த்த முடியும்'' என்றார்.