Skip to main content

தேர்தலுக்கு முன் போடப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்கள் ரத்து!

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

660 road contracts canceled before elections canceled

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு இறுதிச் செய்யப்பட்ட 660 சாலை ஒப்பந்தங்களை ரத்துச் செய்து சென்னை பெருநகர மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. 

 

கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள பெருங்குடி, வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் சாலைகளை சீரமைக்க சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. பொறுப்பேற்றப் பின்னர், இந்த ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்தார். 

 

தற்போது அந்த குழு அளித்துள்ள ஆய்வறிக்கையில், சாலை சீரமைப்பிற்கான ஒப்பந்தங்களில் உள்ள 3,200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும், தற்போதைய நிலையில் அதைச் சீரமைக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்ததால், ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பணிகள் முடியும் முன்பே இடிந்து விழுந்த தடுப்புச் சுவர்; கேள்வி எழுப்பும் பொதுமக்கள்

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

thanjavur thiruvarur pond side wall incident due to summer rain

 

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே ஏனாதிகரம்பை கிராமத்தில் கடந்த மாதம் கல்லணை கால்வாயில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ஷட்டர்கள் அமைத்ததாக மறைத்து வைக்கப்பட்ட பதாகையால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், திட்டத்திற்கு ஒதுக்கிய நிதிக்கு சரியான வேலை நடந்துள்ளதற்கு படங்கள் ஆதாரமாக உள்ளதாக அதிகாரிகள் சொன்னார்கள். தண்ணீர் வந்த போது வேலை நடந்ததாக பதாகையில் உள்ளதே என்றால், ஆமாம். தண்ணீர் வரும் நேரத்திலேயே ஷட்டர் மாற்றினோம் என்றனர். புதுக்கோட்டை எஸ்.ஆர் ஃபேப்ரிகேஷன் நிறுவனம் தான் அந்த பணியைச் செய்ததாக பதாகையில் இருந்தது.

 

அதே போல திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தடுப்புச் சுவர்கள் உள்ள குளங்களில் மீண்டும் தடுப்புச் சுவர்கள் கட்ட ஒப்பந்தம் விடப்பட்ட போதே நிதி வீணாகிறது என்று பிரச்சனை கிளம்பியது. இந்த நிலையில் தான் தாமரைக்குளத்தில் ரூ. 2.20 கோடிக்கு புதுக்கோட்டை கே. இன்பராஸ்டக்சர் நிறுவனம் பணிகள் செய்து கொண்டிருக்கிறது. பணிகள் முடிவடையும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெய்த சாதாரண கோடை மழைக்கே சுவர்கள் சரிந்து கொட்டின. அதே போல ரூ. 84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் செங்குளத்திலும் சாய்தளக் கரையில் சரிவு ஏற்பட்டு கற்கள் கொட்டியுள்ளன.

 

இப்படி கோடி கோடியாக பணத்தைக் கொட்டி தரமில்லாமல் வேலை செய்யும் நிறுவனங்களுக்கு ஏன் பணிகள் கொடுக்க வேண்டும்? கனமழை பெய்து குளத்தில் தண்ணீர் நிரம்பும் போது உயிர்பலிகள் ஏற்படாமல் எப்படி தடுக்க முடியும்? என்ற கேள்வியும் முன்வைக்கிறார்கள் மன்னார்குடி மக்கள். 

 

 

Next Story

வாக்குரிமையை உறுதி செய்ய வழக்கு தொடர்ந்த ஓட்டுநர்கள்.. வழக்கை முடித்துவைத்த உயர் நீதிமன்றம்..! 

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

Drivers suing to confirm suffrage .. High Court closes case ..!


அடுத்த தேர்தலின்போது தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் எவரும் தங்கள் வாக்குரிமையை இழக்கவில்லை என்பதை உறுதிசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்களால் தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை என்றும், அவர்களது வாக்குரிமையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வாடகை வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வாகன ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், அவர்கள் வாக்களிப்பதை உறுதிசெய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டது.

 

மேலும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த தேர்தல்களில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.