ADVERTISEMENT

ஏ.டி.எம் பொறியாளர் வீட்டில் 65 பவுன் நகை கொள்ளை!

10:30 PM Nov 28, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது திருச்சிற்றம்பலம் கூட்ரோடு. இப்பகுதியில் வசிப்பவர் சசிகுமார் (வயது 35). இவர் சென்னை மாநகரில் உள்ள ஏ.டி.எம் மெஷின் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அவரது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அதிகாலை, 4 மணி அளவில் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்துக்கொண்டு மர்ம நபர்கள் சிலர் வீட்டுக்குள் புகுந்து, வீட்டுக்குள் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த நகைகளைக் கொள்ளையடித்தனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த சசிகுமாரின் தாயார் லலிதாவின் கழுத்தில் இருந்த, 5 பவுன் செயினைப் பறித்துள்ளனர்.

கொள்ளையர்களின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அவரது தாயார் லலிதா செயினை கையால் இறுக்கிப் பிடித்துக்கொண்டு 'திருடன்... திருடன்...' என்று சத்தம் போட, இவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள், கொள்ளையர்கள் கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர். லலிதா கொள்ளையர்களிடம் இருந்து செயினை அவிழ்க்கவிடாமல் கையால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததால், அந்த செயினில் பாதி, லலிதா கையிலேயே தங்கியுள்ளது. இருந்தும் மொத்தம் 65 பவுன் நகை கொள்ளையர்களால் திருடப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் என்று கூறப்படுகிறது.

கொள்ளை குறித்து, பொறியாளர் சசிகுமார் ஆரோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர், கொள்ளை நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அதுவும் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. இதையடுத்து, கொள்ளையர்களைப் பிடிக்க, போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT