
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே அனைத்து அரசுத்துறைகளிலும் முந்தைய ஆட்சியில் பணியாற்றி வந்த உயரதிகாரிகள் மற்றும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, காவல்துறையில் பெரிய அளவில் இடமாற்றங்கள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு கட்சியும் புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வரும்போது, முந்தைய ஆட்சிக்காலத்தில் ஒரே இடத்தில் அல்லது ஒரே சரகத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், காவல்துறை உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவதுதான் வழக்கமான நடைமுறையாகும்.
ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த முறை திமுக பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் தனிப்பிரிவில் உளவுப்பணிகளை கவனித்து வரும் தலைமைக்காவலர்கள் வரை கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
வழக்கமாக காவல்துறையில் தொழில்நுட்பப் பிரிவில் இருக்கும் எஸ்ஐக்கள், ஆய்வாளர்கள் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது. இந்நிலையில், அப்பிரிவில் பணியாற்றி வந்த ஆய்வாளர்களையும் இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வந்த 60 ஆய்வாளர்கள் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி பி.டி.பி. காவல்நிலையத்தில் பணியாற்றிவந்த என். ரகு, மேல்பேட்டை ரிப்பிட்டர் காவல்நிலையத்திற்கும், ராமநாதபுரத்தில் பணியாற்றிய ராஜேந்திரன் நாகர்கோவிலுக்கும், விழுப்புரத்தில் பணியாற்றி வந்த சுகந்தி கடலூர் மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
கடலூரில் பணியாற்றி வந்த ஜெயகீதா விழுப்புரத்திற்கும், சேலம் மாவட்டக் காவல்துறையில் பணியாற்றி வந்த முத்துக்குமார், சேலம் மாநகர காவல்துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சேர்வராய்ஸ் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த சதாசிவம் சேலம் மாவட்டக் காவல்துறைக்கும், சேலம் மாநகரில் பணியாற்றி வந்த கோகுலகண்ணன் ஈரோடுக்கும், அங்கு பணியாற்றிய பாஸ்கர் சேர்வராய்ஸ் காவல்நிலையத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
தர்மபுரியில் பணியாற்றி வந்த உமாதேவி கிருஷ்ணகிரிக்கும், நாமக்கல்லில் பணியாற்றி வந்த சாரதா சேலம் மாநகருக்கும், கோவை மாவட்டத்தில் பணியாற்றிய பாலமுருகன் திருப்பூருக்கும், அங்கு பணியாற்றிய ஜெகதீசன் கோவை மாநகருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த சுரேஷ்குமார் தர்மபுரிக்கும் என இவர்கள் உள்பட 60 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாறுதல் உத்தரவை தமிழக தொழில்நுட்பப் பிரிவு கூடுதல் டிஜிபி மல்லிகா பிறப்பித்துள்ளார்.