60 percent government buses in Cuddalore district

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். போக்குவரத்து கழகங்களில் வரவுக்கும்செலவுக்கும் வித்தியாச தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 100 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதியின்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசுதாரர்களுக்கு உடனடியாக பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொமுச தொழிற்சங்கத்தை தவிர மற்ற தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இல்லாமல் குறைவாகவே செல்கிறது.

Advertisment

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட கடலூர் மண்டலத்தில் 11 பணிமனைகள் உள்ளன. இதில் மொத்தம் 507 பேருந்துகள் உள்ளது. இதில் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணி அளவில் 214 பேருந்துகள் அந்தந்த பணிமனையில் இருந்து வெளியே சென்றுள்ளது. இதில் சிதம்பரத்தில் கும்பகோணம் கோட்ட பணிமனை உள்ளது. இதில் 32 பேருந்துகளில் 18 பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே கடலூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் 50 சதவீதம் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு வெளியானதால் பொதுமக்களின் கூட்டம் பேருந்து நிலையங்களில் குறைவாகவே காணப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் பொங்கலையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் கடந்த ஒரு ஆண்டுகளில் ஹெவி லைசென்ஸ் பெற்றவர்கள் விவரத்தை வாங்கி அவர்களுக்கு பேருந்தை ஓட்டுவதற்கு பயிற்சி கொடுத்து அவர்களில் யார் சரியாக ஓட்டுகிறார்களோ அவர்களை தற்காலிகமாக ஓட்டுநர்களாக நியமித்து பேருந்துகளை வழங்கி சுமூகமான சூழலை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதே போல் நடத்துனரையும் நியமித்துள்ளனர். இதில் ஓட்டுநர்களுக்கு ஒரு வேலை நேரத்திற்கு ரூ 700-ம் நடத்துனர்களுக்கு ரூ675-ம் வழங்கப்படுவதாக அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது. இந்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தொழிற்சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் விளக்கிக் கொண்டுள்ளனர். குறைந்த அளவே அரசு பேருந்து செல்வதால் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் உள்ளிட்ட சில பேருந்து நிலையங்களிலும் சில வழித் தடங்களில் அதிகமான மக்கள் கூட்டம் செல்கிறது. எனவே அரசு இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் சார்பில் கூறப்படுகிறது. ஒவ்வொரு பணிமனையிலும் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment