பள்ளி வளாகம் சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இடமாக இருப்பதாகவும், சுகாதாரம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு பள்ளி மாணவ மாணவியருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என 6 வயது பள்ளி மாணவி தொடர்ந்துள்ள பொதுநல வழக்கால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும், துறை அமைச்சரும் அதிர்ந்துபோய் உள்ளனர்.

high court

சென்னை அருகே உள்ளது மீஞ்சூர். இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவி அதிகை முத்தரசி (6) பயின்று வருகிறார். அவரது சார்பாக அவரது தந்தை பாஸ்கரன் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்.

Advertisment

அந்த மனுவில், கோயில் அருகே உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம் பிச்சைக்காரர்கள் ஓய்வெடுக்கும் இடமாகவும், சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது. சுகாதாரம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு பள்ளி மாணவ மாணவியருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. பள்ளியை புதுப்பிக்க வேண்டுமென்று கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அரசு அதிகாரியிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கல்வியை சிறப்பாக வழங்க அனைத்து ஏற்பாடும் செய்து வருவதாக கூறும் அரசும், அரசு அதிகாரிகளும் இந்த பள்ளியை மேம்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இந்த பள்ளியை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திருவள்ளூர் கலெக்டர், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர், பொன்னேரி தாசில்தார், தொடக்கக்கல்வி அலுவலர், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்டோருக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கை அக்டோபர் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும் அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். அக்டோபர் 16ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது, அரசு வக்கீலுக்கு உதவும் வகையில் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரி, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அதிகாரி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Advertisment

6 வயது பள்ளி மாணவி தொடர்ந்துள்ள பொதுநல வழக்கால் சம்மந்தப்பட்ட அதிகாரிகாரிகள் அதிர்ந்துபோய் உள்ளார்களாம். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விவரம் கேட்ட துறை சார்ந்த அமைச்சரும் அதிர்ச்சி அடைந்தாராம். மீஞ்சூர் பள்ளியில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய உரிய நடவடிக்கையை எடுக்க சொல்லியிருக்கிறாராம்.