Skip to main content

தமிழகத்தையே உலுக்கிய 6 பேர் கொலை வழக்கு; சேலம் நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரணை தொடக்கம்

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

 6 person case Testimony begins in Salem court
சிவகுரு

 

தமிழகத்தையே உலுக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், சாட்சிகள் மீதான விசாரணை சேலம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 13) தொடங்கியது.   

 

சேலம் தாசநாயக்கன்பட்டி சவுடாம்பிகா நகர் அனெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் குப்புராஜ்(78). ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். இவருடைய மனைவி சந்திராம்மாள் (72). இவர்களுக்கு விஜயலட்சுமி (54), ராமலிங்கம் (50), சிவகுரு (48), ரத்தினம் (45) ஆகிய நான்கு பிள்ளைகள். இவர்களில் சிவகுரு என்பவர் தாசநாயக்கன்பட்டி ஊராட்சிமன்ற முன்னாள் துணைத்தலைவராக இருந்தார்.

 

குப்புராஜூக்கு தாசநாயக்கன்பட்டியில் சொந்தமாக 6 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. அதில் தனது மகன்கள் ராமலிங்கம், ரத்தினம் ஆகிய இருவருக்கும் தலா 3 ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்துவிட்டார். சிவகுருவுக்கு சிறுநீரகப் பிரச்சனை இருந்து வந்தது. அதற்காக அவருக்கு மருத்துவச் செலவுகளுக்குப் பண உதவி செய்து இருந்ததைக் காரணம் காட்டி, அவருக்கு நிலத்தைப் பிரித்துக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதேநேரம், தாதகாப்பட்டியில் குப்புராஜூக்கு சொந்தமான ஒரு வீட்டை சிவகுருவுக்கு எழுதிக் கொடுத்துள்ளார். ஆனாலும் சிவகுரு, விவசாய நிலத்திலும் தனக்கு பங்கு வேண்டும் என்று தந்தையிடம் கேட்டு வந்துள்ளார். இது தொடர்பாக அவர் நீதிமன்றத்திலும்  வழங்கு தொடர்ந்தார்.  

 

இளைய மகன் ரத்தினம் தனது குடும்பத்தினருடன் பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி இரவு குப்புராஜ், அவருடைய மனைவி சந்திராம்மாள், இளைய மகன் ரத்தினம், அவருடைய மனைவி சந்தனகுமாரி (40), மகன் கவுதமன் (20), மகள் பேரக்குழந்தைகள் விக்னேஷ்வரி (13) ஆகிய ஆறு பேரும் வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர்.  அப்போது வீட்டுக்குள் திடீரென்று புகுந்த மர்ம கும்பல் அவர்கள் 6 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் 6 பேரும் ரத்த வெள்ளத்தில் சடலமாகினர்.  

 

இந்த சம்பவத்திற்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை காலையில் குப்புராஜின் மகன் சிவகுரு, உயர்நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவர், தனக்கும் தன் தந்தைக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்ததாகவும், தனக்குச் சேர வேண்டிய பாகத்தைப் பிரித்துக் கொடுக்காததால் ஆத்திரத்தில் என் பெற்றோரையும், தம்பியையும், அவருடைய குடும்பத்தையும் வெட்டிக்கொலை செய்துவிட்டேன் என்று தெரிவித்தார்.  

 

அதையடுத்தே சேலம் மாவட்டக் காவல்துறைக்கு நீதிமன்றத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஒதுக்குப்புறமான தோட்டத்து வீட்டில் சம்பவம் நடந்ததால் உடனடியாக காவல்துறைக்கும், அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரியவில்லை. காவல்துறையினர் சென்றபோது அங்கு ரத்த வெள்ளத்தில் ஆறு பேரும் சடலமாகக் கிடந்தனர்.  

 

இந்த சம்பவம் தொடர்பாக சிவகுரு, அவருடைய மனைவி மாலா, மகள் யுவபிரியா, இவருடைய கணவரும், ஆயுதப்படை காவலருமான ரஜினி, இவருடைய மகன் கோகுல் மற்றும் திமுக பிரமுகரும் அப்போது சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராகவும் இருந்த பாரப்பட்டி சுரேஷ்குமார், திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சம்பத், அம்மாபாளையம் செந்தில்குமார், வெடிகாரன்புதூர் சேகர் ஆகிய 9 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இந்தக் கொடூர கொலையின் பின்னணியில், அப்போது வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனான பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு தொடர்பு இருந்ததாகச் சொல்லப்பட்டதால், இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நெஞ்சை உறைய வைத்த இந்தக் கொலை வழக்கை ஆரம்பத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், வழக்கின் முக்கியத்துவம் கருதி பின்னர் சேலம் சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது.  

 

கைது செய்யப்பட்டவர்களில் பாரப்பட்டி சுரேஷ்குமார், வழக்கறிஞர் சம்பத் ஆகிய இருவரும் இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று கூறி உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து தங்களையும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில்குமார்,  வெடிகாரன்புதூர் சேகர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  

 

இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் மீதான விசாரணை, சேலம் 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 13) தொடங்கியது. வழக்கின் முதல் புகார்தாரரான விஏஓ ராமசாமி, அவருடைய உதவியாளர் மாணிக்கம் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஏற்கனவே இறந்து விட்டதால், இருவரின் இறப்புக்கான சான்றிதழை சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.  

 

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவகுருவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 18.10.2016ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது இறந்துவிட்டார். அவருடைய மனைவியும் காலமாகிவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான கோகுல்நாத், கொலை நடந்தபோது 17 வயது சிறுவனாக இருந்ததால் அவர் மீதான விசாரணை சிறார் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

 

இவர், ஏற்கனவே இரண்டரை ஆண்டுகள் சிறார் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, சாட்சிகள் மீதான விசாரணையை வரும் ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அன்று சாட்சிகளிடம் விசாரணை தொடங்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

 

 

சார்ந்த செய்திகள்