6 layoffs; One transfers; The death toll rose to 12

Advertisment

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தின் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விஜயன், மலர்விழி, சுரேஷ், சங்கர், கேசவவேலு, விஜயன், தரணிவேல், ராஜமூர்த்தி, சங்கர், மண்ணாங்கட்டி, ராஜவேல், ஆபிரஹாம் ஆகிய 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் உட்பட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் இது தொடர்பாக ஆட்சியர், எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “கள்ளச்சாராயத்தில் மெத்தனாலை பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசின் உத்தரவை மீறி கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை கண்காணிக்காமல் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Advertisment

இந்நிலையில் இந்த விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம், செங்கல்பட்டு மதுவிலக்குபிரிவு துணை கண்காணிப்பாளர்களையும் பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக ஆய்வு நடத்திய நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப்பையும் பணியிடைமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2 ஆய்வாளர்கள் 4 காவலர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.