Skip to main content

6-ந் தேதி ஆர்ப்பாட்டம்: ஜி.கே.வாசன்

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
வாசன் தலைமையில் 6-ந் தேதி ஆர்ப்பாட்டம்

மத்திய,மாநில அரசுகளை கண்டித்து த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தலைமையில் 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதமாக டெங்கு காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோயின் தாக்கத்தால் பல பேர் உயிரிழந்திருக்கிறார்கள். குறிப்பாக சென்னையில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சூழலில் டெங்கு நோயினைக்கட்டுப்படுத்தவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மாநில அரசு மாநிலம் முழுவதும் எடுக்க தவறிவிட்டது.

இதனால் டெங்குவின் தாக்கம் இன்னும் அதிகரித்துக் கொண்டே போகிறது. மேலும் சில அரசு மருத்துவமனைகளில் டெங்குவைக் குணப்படுத்த போதிய மருத்துவர்கள் உரிய நேரத்தில் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

எனவே தமிழகத்தில் டெங்குவை குணப்படுத்தவும், கட்டுப்படுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு 24 மணி நேர மருத்துவ சேவையை வழங்க வேண்டும்.

மேலும் மத்திய பா.ஜ.க. அரசு பொதுத்துறை எண்ணை நிறுவனங்களுக்கு அளித்த அனுமதியால் அந்நிறுவனங்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலையில் அவர்கள் லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு விலையில் மாற்றம் செய்கிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலையானது திடீர் திடீரென்று உயர்த்தப்படுவதால் மக்கள் மீது சுமை ஏறுகிறது.

இதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே மத்திய அரசே பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிலைத்த தன்மையோடு நிர்ணயம் செய்யவும், கலால் வரியை ரத்து செய்யவும் முன்வர வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய மெத்தனப்போக்கையும், செயலற்ற தன்மையையும் கண்டிக்கும் விதமாகவும், இப்பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் விதமாகவும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை கடற்கரை ரயில் நிலையம் எதிரில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் எனது தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்