/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3824.jpg)
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இளைஞரை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த 6 பேர் கொண்ட கும்பலை புதன்கிழமை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் வசித்து வருபவர் 27 வயது இளைஞர். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த இளைஞர் திங்கட்கிழமை மாலை தனியார் பேருந்தில் மணப்பாறைக்கு சென்றுள்ளார். அப்போது அவருடன் இருக்கையில் அமர்ந்து பயணித்த வண்டிப்பேட்டை தெரு எஜமான் மகன் அறிவழகன் (27) தனது நண்பர்களுக்கு கைப்பேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதைக்கண்டு பயந்த அந்த இளைஞர் மணப்பாறை பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அறிவழகனின் அழைப்பைத் தொடர்ந்து 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்துள்ளனர். பின், அந்த இளைஞரை மறைவான பகுதிக்கு கடத்தி சென்று அங்குசேதுரத்தினபுரம் காஜாமைதீன் மகன் முகமது ரியாஸ் (24) என்பவனிடம் ஓரினச்சேர்க்கை செய்ய வற்புறுத்தியுள்ளார். அதை மஸ்தான் தெரு தங்கராஜ் மகன் அருண்குமார் (22) வீடியோ எடுத்துள்ளான். பின்னர் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று இளைஞரை மிரட்டி அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 75 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் லட்சுமிநாராயண நகர் மோகன் சிங் மகன் லியோ பிளாய்டு (25) வங்கிக் கணக்கில் பெற்றுள்ளனர்.
பின்னர் பணத்தை 6 பேரும் பங்கிட்டுக் கொண்டதாக தெரிகிறது. இரவில் சுமார் 6 மணி நேர துன்புறுத்தலுக்கு பின் விடுவிக்கப்பட்ட இளைஞர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்துள்ள மணப்பாறை போலீஸார் புதன்கிழமை அறிவழகன், முகமது ரியாஸ், அருண்குமார், லியோ பிளாய்டு மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த மணப்பாறைப்பட்டி சாலை முருகன் மகன் மயில் (எ) செந்தில்குமார் (25), நேருஜி நகர் மோகன் மகன் யுவராஜ் (26) ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)