Advertisment

உரிமம் இல்லாமல் செயல்பட்ட 58 பார்கள்... அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

58 bars operating without a license, Officers who took action

கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகரப் பகுதியில் 41 மதுபான கடைகளும், புறநகர் பகுதியில் 74 கடைகளும் சேர்த்து மொத்தம் 135 மதுக்கடைகள் செயல்பட்டுவருகின்றன. இந்த நிலையில், மதுக்கடை அருகில் மதுபான பார்கள் தனியார் மூலம் நடத்தப்பட்டுவருகிறது. இதற்காக ஏலம் நடத்தி பார்கள் நடத்த உரிமம் வழங்கப்பட்டுவரும் நிலையில், கரோனா பரவல் காரணமாக மதுக்கடைகள், மதுபான பார்கள் மூடப்பட்டன. இதற்கிடையில், கரோனா பரவல் குறைந்ததால் கடந்த செப்டம்பர் மாதம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் மதுபான பார்கள் திறக்க அனுமதி அளிக்கவில்லை.

Advertisment

கடந்த 1ஆம் தேதி முதல் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து மதுபான பார்களை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து பார்கள் திறக்கப்பட்டு செயல்பட்டுவந்தன. இந்த நிலையில், பெரும்பாலான மதுபான பார்கள் உரிமம் இல்லாமல் செயல்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வு நடத்தி உரிமம் இல்லாத பார்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, உடனடியாக உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால் அதிகாரிகள் தெரிவித்த காலக்கெடுவிற்குள் பார்களுக்கு உரிமம் பெறவில்லை. இதையடுத்து பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட பார்களை அதிகாரிகள் மூடினர்.

Advertisment

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது, “கோவை தெற்கு மாவட்ட பகுதியில் 135 மதுக்கடைகள் செயல்பட்டுவருகின்றன. கடைகளுக்கு அருகில் பார்கள் நடத்தப்பட்டுவருகின்றன. அதன்படி 113 மதுபான பார்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி மதுபான பார்கள் மூடப்பட்டன. தற்போது கரோனா கட்டுக்குள் உள்ளதால் கடந்த 1ஆம் தேதி முதல் பார்கள் செயல்பட்டுவருகின்றன. ஆனால் 58 மதுபார்கள் உரிமம் இல்லாமல் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பணத்தைச் செலுத்தி உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமம் பெற்ற பிறகு மதுபான பார்களை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்படும்” என கூறினார்கள்.

bar Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe