Skip to main content

சேலத்தில் 144 தடையை மீறிய 55 பேர் கைது! 1027 வழக்குகள் பதிவு!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 


கோவிட்-19 நோய்த் தொற்றில் இருந்து தப்பிக்க, இப்போதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேநேரம், நோய்த்தொற்றில் இருந்து காத்துக்கொள்ள சமூக விலகலை தீவிரமாகக் கடைப்பிடிக்க இந்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் சிஆர்பிசி பிரிவு 144 தடை உத்தரவு எனப்படும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து 21 நாள்கள் இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.


இந்த உத்தரவு அமலில் உள்ள காலக்கட்டத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரே இடத்தில் கூடவும், ஒன்றாகச் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு செல்லும் நபர்கள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

 

 arrested



இவ்வளவு கடுமையான உத்தரவுகள் இருந்தும் சேலத்தில் புதன்கிழமை (மார்ச் 25) பல இளைஞர்கள் தெருக்களில் ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருந்தனர். சாலையோர சிறு கடைகள் முதல் பெரும் வணிக நிறுவனங்கள் வரை அடைக்கப்பட்டிருந்ததால், முக்கிய சாலைகளில் ஆள்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தன. ஆனாலும், பொழுதுபோக்காக இளைஞர்கள் வாகனங்களில் தெருக்களில் சுற்றிக்கொண்டிருந்தனர்.

 

 arrested



சேலம் மாநகரில் 144 தடை உத்தரவை மீறி, புதன்கிழமையன்று பொது இடங்களில் சுற்றிக்கொண்டிருந்த 55க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், தடையை மீறி இருசக்கர வாகனங்களில் சென்றதாக 1027 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தடையை மீறி இயக்கப்பட்ட 25க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


இது ஒருபுறம் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, சூரமங்கலம், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உழவர் சந்தைகளில் காய்கறி வாங்க வருபவர்கள், கூட்டமாக நிற்பதைத் தவிர்க்கும் வகையிலும், கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்கும் நோக்கிலும், தனித்தனியாக நிற்பதற்காக தலா ஒரு மீட்டர் இடைவெளி விட்டு தனித்தனியாக கட்டம் போடப்பட்டு உள்ளன. 


கட்டத்தை விட்டு வெளியேறிச்சென்று கூட்டமாக நிற்போர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும் என்றும் மாநகர் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் டூ ஏற்காடு; கொல்லப்பட்ட பெண் - உறைய வைக்கும் பின்னணி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Two youths were arrested in the case of the passed away of the young woman

சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப் பாதையில் 40 அடி பாலம் அருகே மார்ச் 20 ஆம் தேதி, கடும் துர்நாற்றம் வீசுவதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. வனக்காவலர் பெருமாள் அங்கே சென்று பார்த்தபோது, வனப் பகுதிக்குள் 20 அடி பள்ளத்தில் ஒரு சூட்கேஸ் பெட்டி கிடப்பதும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதும் தெரிய வந்தது.

இதுகுறித்து அவர் ஏற்காடு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். அதன்பேரில், ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் காவலர்கள் நிகழ்விடம் விரைந்தனர். ஈக்களும் புழுக்களும் மொய்த்துக் கொண்டிருந்த அந்த மர்ம சூட்கேஸை கைப்பற்றினர். அதைத் திறந்து பார்த்தபோது, அந்த பெட்டிக்குள் அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் இருந்தது தெரிய வந்தது. கொலையுண்ட பெண் சுடிதார் டாப்ஸ் மற்றும் பேண்ட் ஆகிய உடைகளை அணிந்திருந்தார்.

தடயவியல் நிபுணர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று தடயங்களைச் சேகரித்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சடலத்தை கூராய்வு செய்தனர். மர்ம நபர்கள் இளம்பெண்ணை கொலை செய்து, சூட்கேஸ் பெட்டிக்குள் அடைத்து, நீண்ட நாள்களுக்கு முன்பே இந்தப் பகுதியில் வீசியிருக்க வேண்டும் என்பதால், சடலம் முற்றிலும் சிதிலம் அடைந்து இருந்தது. அதனால் சடலமாகக் கிடப்பது யார் என்று உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

தகவல் அறிந்த மாவட்டக் காவல்துறை எஸ்.பி., அருண் கபிலன், சேலம் புறநகர் டி.எஸ்.பி. அமலா அட்வின் நிகழ்விடம் விரைந்தனர். கொலையுண்ட நபர் யார் என்று தெரிந்துவிட்டால், கொலையாளியை எளிதில் நெருங்கி விட முடியும் என்பதால், முதலில் சடலமாகக் கிடந்த இளம்பெண் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறையினரை முடுக்கிவிட்டார் எஸ்.பி., சடலம் கிடந்த சூட்கேஸ் பெட்டி புதியதாகவும், பெரியதாகவும் இருந்தது. அந்தப் பெட்டியை விற்பனை செய்த கடையின் ஸ்டிக்கர் இருப்பது தெரிய வந்தது. அதை வைத்து விசாரித்தபோது, கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள டிராவல்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் கடையிலிருந்து வாலிபர் ஒருவர் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றது தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் விசாரித்தபோது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவக்கோட்டையைச் சேர்ந்த நடராஜ்(32) என்பவர்தான் அந்தப் பெட்டியை வாங்கிச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, இளம்பெண் கொலை வழக்கில் மர்ம முடிச்சுகள் அடுத்தடுத்து அவிழத் தொடங்கின. நடராஜை  கைது செய்து காவல்துறையினர், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் சினிமாவை விஞ்சும் திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன.  சூட்கேஸ் பெட்டிக்குள் சடலமாகக் கிடந்தது, தேனி மாவட்டம் முத்துலாபுரத்தைச் சேர்ந்த சுபலட்சுமி (33) என்பதும், அவரைத் தான்தான் கொலை செய்து பெட்டியில் அடைத்து, ஏற்காடு மலைப் பகுதியில் வீசிச் சென்றேன் என்றும் ஆரம்பத்திலேயே ஒப்புக்கொண்டார் நடராஜ்.

கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தரப்பில் விசாரித்தோம்.  பொறியியல் பட்டயப் படிப்பு முடித்துள்ள நடராஜ், பிரான்ஸ் நாட்டில் வேலை செய்து வந்தார். வெளிநாடுகளுக்கு பட்டதாரி இளைஞர்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் கன்சல்டன்சி நிறுவனமும் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு பெண் குழந்தைகளும் பரவக்கோட்டையில் வசிக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பிரான்சில் வேலை செய்து வந்தபோது, மேட்ரிமோனி இணையதளத்தில் தனக்கு இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேவை என புகைப்படத்துடன் பதிவு செய்திருந்தார். அப்போது கத்தார் நாட்டில் உள்ள ஒரு கணினி நிறுவனத்தில் வேலை செய்து வந்த, சுபலட்சுமியும் தன்னுடைய இரண்டாம் திருமணத்திற்கு மணமகன் தேவை என்றும், கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும், நடராஜ் பதிவு செய்திருந்த அதே மேட்ரிமோனி இணையதளத்தில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணுடன் விவரங்களை பதிவு செய்திருந்தார்.

Two youths were arrested in the case of the passed away of the young woman

மேட்ரிமோனி இணையதளத்தின் மூலம் அறிமுகமாகிக் கொண்ட இருவரும், தினமும் செல்போன் மூலம் பேசி நட்பை வளர்த்துக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அவர்களின் நட்பு எல்லை தாண்டி, திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இந்தியா திரும்பியதும் இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தவும் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் இந்தியா திரும்பினர். இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று சில நாள்கள் தங்கியிருந்து விட்டு, மீண்டும் வெளிநாட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பி விட்டனர். ஆனால் அவர்கள் வெளிநாட்டுக்குச் செல்லாமல் ஏற்கனவே திட்டமிட்டு இருந்தபடி, கோவை பீளமேட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

சுபலட்சுமி மீது காதல் வயப்பட்டு இருந்த நடராஜ், அவருடைய பெயரை தனது கையில் டாட்டூவாக குத்தி இருந்தார். இதற்கிடையே, கடந்த ஜனவரி 1ம் தேதி பரவக்கோட்டையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று மனைவி, குழந்தைகளைப் பார்த்துவிட்டு மீண்டும் கோவை திரும்பினார் நடராஜ். கோவைக்கு வந்த நடராஜிடம், அவர் கையில் தனது பெயரின் டாட்டூ அழிக்கப்பட்டு இருந்தது குறித்து சுபலட்சுமி கேள்வி எழுப்பினார். பரவக்கோட்டையில் உள்ள தனது மனைவி, குழந்தைகளைப் பார்க்கச் சென்றதாகவும், அதனால் டாட்டூவை அழித்துவிட்டதாகவும் கூறியுள்ளார் நடராஜ். இதனால் ஜன. 1ம் தேதி இரவு அவர்களுக்குள் விடிய விடிய கடும் வாக்குவாதமும் தகராறும் ஏற்பட்டுள்ளது.

குடிபோதையில் இருந்த நடராஜ், ஆத்திரத்தில் சுபலட்சுமியைப் பிடித்து இழுத்து அவருடைய தலையை சுவரில் மோதியுள்ளார். வீட்டில் இருந்த கட்டையாலும் அவருடைய தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சுபலட்சுமி, நிகழ்விடத்திலேயே பலியானார். அவர் இறந்துவிட்டதை அறிந்த நடராஜ், பதற்றம் அடைந்துள்ளார். இதையடுத்து அவர், பரவக்கோட்டையில் உள்ள தனது உறவுக்கார நண்பன் கனிவளவனை தொடர்பு கொண்டு, நடந்த சம்பவம் குறித்து கூறி உதவிக்கு அழைத்துள்ளார்.

காவல்துறையில் சிக்காமல் இருக்க, பெண்ணின் சடலத்தை மறைத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள், கோவையில் உள்ள லூலூ மால் வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பெரிய அளவில் ஒரு டிராலி சூட்கேஸ் பெட்டியை வாங்கினர். அந்த பெட்டியில் சுபலட்சுமியின் சடலத்தை திணித்தனர். பிறகு ஒரு காரை வாடகைக்கு எடுத்த அவர்கள், அதில் சடலத்துடன் கூடிய பெட்டியை வைத்துக் கொண்டு, அவர்களே ஏற்காட்டிற்கு ஓட்டிச் சென்றுள்ளனர். இரவு நேரத்தில் காரை ஓட்டிச் சென்ற அவர்கள், ஆள் நடமாட்டம் இல்லாத 40 அடி பாலம் அருகே அடர்ந்த வனப்பகுதிக்குள் சடலத்துடன் கூடிய சூட்கேஸ் பெட்டியை தூக்கி வீசியுள்ளனர்.

பின்னர் மலையேறிய அவர்கள், அங்கிருந்து குப்பனூர் வழியாக இரவோடு இரவாக காரில் தப்பிச் சென்றுவிட்டனர். இரண்டரை மாதங்களாகியும் இந்த சம்பவம் குறித்து வெளியே செய்திகள் ஏதும் பரவாத நிலையில், இனியும் தங்களுக்கு சிக்கல் ஏதும் வராது என்று நடராஜ் கருதினார். இதனால் அவர் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்குச் செல்லத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தார். இந்நிலையில், சூட்கேஸ் பெட்டியில் இருந்த சின்ன தடயத்தால் காவல்துறை பிடியில் சிக்கிக் கொண்டார்.

இதற்கிடையே, சடலத்தை வீசிய நாளிலிருந்து நடராஜ் ஒரே இடத்தில் வசிக்காமல், கோவை, சென்னை, பரவக்கோட்டை என அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்துள்ளார். மார்ச் 20ம் தேதி, சடலம் கைப்பற்றப்பட்ட தகவல் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, அவர் பிரான்ஸூக்குச் சென்று தலைமறைவாகி விடலாம் என்றும் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் விரைவாகச் செய்து வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

சடலத்தை மறைக்கத் திட்டமிட்ட அவர்கள், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலைப் பகுதியில் வீசிவிடலாம் எனக் கருதி அங்கு சென்றுள்ளனர். பின்னர் கள்ளக்குறிச்சி சேர்வராயன் மலைப் பகுதிக்கு வந்த அவர்கள், கடைசியாக ஏற்காடு மலையைத் தேர்வு செய்து, சடலத்தை வீசிச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நடராஜ், அவருடைய நண்பர் கனிவளவன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், ஏற்காடு குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் மார்ச் 24 ஆம் தேதி ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சடலம் கைப்பற்றப்பட்ட ஐந்தே நாள்களில், கொலையுண்ட பெண் யார் என்பதைக் கண்டறிந்து, கொலையாளிகளையும் கைது செய்த டிஎஸ்பி அமலா அட்வின், காவல் ஆய்வாளர்கள் செந்தில்ராஜ் மோகன், நாகராஜ், ஸ்ரீராம் தலைமையிலான தனிப்படையினரை சேலம் சரக டிஐஜி உமா, மாவட்ட எஸ்பி அருண் கபிலன் ஆகியோர் பாராட்டினர். 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.