ADVERTISEMENT

'சொன்னால் 50 ஆயிரம் பரிசு'-பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

04:31 PM Mar 31, 2024 | kalaimohan

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் செந்தில்நாதன் வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை மற்றும் அய்யலூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

ADVERTISEMENT

அப்போது பிரச்சார வாகனத்தில் நின்று பொதுமக்களிடையே பேசிய திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க தலைவர் கனகராஜ், கரூர் சிட்டிங் எம்.பியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணியின் புகைப்படத்தை காட்டி, இவர் கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை முறை ஊருக்கு வந்தார். உங்கள் குறைகளை எத்தனை முறை கேட்டறிந்தார்? எத்தனை குறைகளை நிறைவேற்றினார்? என்று கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வந்து எத்தனை பேர் கூறினாலும், அனைவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக நமது வேட்பாளர் செந்தில்நாதன் அறிவிக்கிறார். அதற்காக கரூர் கட்சி அலுவலகத்தில் தனி கவுண்டர் போடப் போகிறோம். அங்கே வந்து நீங்கள் கூறினால் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று கூறி 50 ஆயிரம் ரூபாய் பணக்கட்டை ஆட்டி காண்பித்து பேசினார்.

இந்த சம்பவம் குறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி திவாகர் வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கரூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் செந்தில்நாதன், திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க தலைவர் கனகராஜ், தமிழர் தேசம் கட்சியின் மாநில அமைப்பாளர் மகுடீஸ்வரன், உள்ளிட்ட 5 பேர் மீது வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT