/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/eb-office.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் மின்வாரிய அலுவலகத்தின் முன்பு பொதுமக்கள் திரண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காரணம், இப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்கள் வீடுகளுக்கான மின் கட்டணத்தை ரிஷிவந்தியத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கொண்டுவந்து செலுத்துவார்கள். இந்த அலுவலகம் மூலம் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ஒவ்வொரு வீடுகளுக்கும்முறையாக மின் கணக்கீடு செய்யாமல் அக்டோபர் மாதத்தில் தோராயமாக கணக்கீடு செய்து, ஒரு வீட்டுக்கு 5,000 முதல் 20 ஆயிரம் வரை மின் கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி கிராம மக்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது பயனாளிகள் கூறும்போது, “ஒவ்வொரு மாதமும் முறையாக மின் கட்டணத்தைக் கணக்கீடு செய்து தெரிவித்திருந்தால் நாங்கள் உடனுக்குடன் மின் கட்டணத்தை செலுத்தியிருப்போம். கடந்த ஆறு மாதங்களாக முறையாக மின் கட்டணத்தைக் கணக்கீடு செய்யாமல், அக்டோபர் மாதத்தில் மட்டும் தோராயமாக கணக்கீடு செய்து 5000 முதல் 20 ஆயிரம் வரை பணம் கட்டச் சொல்கிறார்கள். திடீரென இவ்வளவு மின்கட்டண தொகை செலுத்துமாறு கூறினால் பணத்திற்கு எங்கே போவது.
இந்தக் கரோனா காலத்தில் வேலைவாய்ப்பு இல்லை. அதனால் வருமானம் இல்லாமல் தவித்துவருகிறோம். இந்த நேரத்தில் இவ்வளவு பணம் கட்டச் சொன்னால் நாங்கள் என்ன செய்வது”என்று வேதனையுடன் கூறினார்கள். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மின்வாரிய செயற்பொறியாளர் கருணாநிதி ஆகியோர் பயனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகப்படியாக மின் கட்டணம் கட்டுமாறு கூறப்பட்ட பயனாளிகளிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டு அதனை உடனடியாக மாவட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு அனுப்பிவைத்து உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மின்வாரியத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)