Advertisment

500 ரேசன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை

500 ration shops selling tomatoes from today

Advertisment

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக ஒரு கிலோ தக்காளி 120 முதல் 150 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த தக்காளியைக் கூடுதலாகக் கொள்முதல் செய்து 62 பண்ணை பசுமை கடைகள் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு ரேசன் கடைகளில் தக்காளி விற்பனையைத் தொடங்கியது. இதன் மூலம் ஒரு கிலோ தக்காளியை60 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.

இதையடுத்து கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்ததால் கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தக்காளியின் மொத்த விற்பனை விலை சற்று குறைந்திருந்தது. இருப்பினும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகத் தெலங்கானா, ஆந்திரா மற்றும் கர்நாடக போன்ற மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தக்காளி விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேட்டிற்குத் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த ஒரு சில தினங்களாக தக்காளி கிலோ ஒன்றுக்கு 110 முதல் 140 வரை ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் மொத்த விற்பனையில் தக்காளி கிலோவுக்கு 20 உயர்ந்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நேற்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி மொத்த விற்பனை விலை நேற்று முன்தினத்தை விட 20 ரூபாய் அதிகரித்து 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லறை விற்பனையில் 200 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் தேவை அதிகம் இருக்கும் சூழலில் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.

Advertisment

தமிழகத்தில் மீண்டும் தக்காளி விலை அதிகரித்திருக்கும் நிலையில், தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்கனவே தமிழகத்தில் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை நடந்துவரும் நிலையில், மேலும் 200 கடைகளில் விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள 500 ரேசன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

tomato
இதையும் படியுங்கள்
Subscribe