Skip to main content

“தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடல் அறிவிப்போடு போனதா?” - அன்புமணி 

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

"500 liquor shops in Tamilnadu with closure notice?" - Anbumani

 

“மதுக்கடைகளை மூடும் அறிவிப்பு அறிவிப்பாகவே முடிந்து விடுமோ? என்ற கவலை ஏற்படுகிறது” என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

 

தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடும் விவகாரம் குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அறிவித்தார். அதன்பின் இன்றுடன் 40 நாட்கள் ஆகும் நிலையில், இன்று வரை 500 மதுக்கடைகளை மூடுவதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. அதனால், மதுக்கடைகளை மூடும் அறிவிப்பு அறிவிப்பாகவே முடிந்து விடுமோ? என்ற கவலை ஏற்படுகிறது.

 

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டவாறு மதுக்கடைகள் மூடப்படாதது ஏன்? என்று வினாக்கள் எழுப்பப்படும் போதெல்லாம், மூடப்பட வேண்டிய மதுக்கடைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக மட்டும் தான் பதில் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகள் எங்கெங்கு உள்ளன? ஒவ்வொரு கடையின் வருவாய் எவ்வளவு? எவையெல்லாம் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளன? எந்தெந்த மதுக்கடைகளையெல்லாம் மூட வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்? என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆவணமாக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் நிர்வாகம் நினைத்தால் அவற்றை ஆய்வு செய்து ஒரு மணி நேரத்தில் மூடப்பட வேண்டிய மதுக்கடைகளின் பட்டியலை தயாரித்து விடலாம். ஆனாலும், டாஸ்மாக் நிர்வாகம் இந்த விவகாரத்தில் தள்ளாடுவதன் காரணம் புரியவில்லை.

 

தமிழ்நாட்டில் 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் முறையே 500, 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. 2016-ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியானதிலிருந்து 27 நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட்டன. 2017-ஆம் ஆண்டில் நான்கே நாட்களில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. அப்போது இருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது இப்போதுள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைவு. அதனால், மூடப்படும் கடைகளின் பட்டியலை இன்னும் விரைவாக தயாரிக்க முடியும். ஆனாலும், 40 நாட்களாகியும் இதுவரை கடைகள் மூடப்படாதது ஏன்?

 

மதுக்கடைகள் மூடப்படுவதால் பயன்விளைய வேண்டும் என்றால், அதிக மது விற்பனையாகும் கடைகள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள், பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகள் போன்றவற்றிலிருந்து 500 கடைகளை உடனடியாக மூட வேண்டும். இவற்றை அடையாளம் காண்பது கடினமல்ல. தமிழக அரசு கோரினால் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த பட்டியலை தயாரித்து வழங்க பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. எனவே, இனியும் தாமதிக்காமல் அடுத்த 3 நாட்களுக்குள் 500 மதுக்கடைகளையும் மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மண்ணுக்குள் கள்ளச்சாராயம்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.