திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் புறவழிச்சாலையில் டீக்கடை ஒன்று உள்ளது. நேற்று இந்த டீக்கடைக்கு 50 வயது வாடிக்கையாளர் ஒருவர் டீ குடிக்க சென்றுள்ளார்.

Advertisment

bonda

அப்போது டீக்கடையில் அவருக்கு அருகில் இருந்தவர்கள் சூடாக போண்டா சாப்பிட்டு கொண்டிருந்தனர். அதை பார்த்த 50 வயது பெரியவர், கடைக்காரரிடம் போண்டா ஒன்று கேட்டுள்ளார். உடனே அந்த நபர் ஒரு போண்டாவை எடுத்து, ஒரு துண்டு காகிதத்தில் வைத்து கொடுத்துள்ளார்.

அந்த போண்டாவை வாங்கியவருக்கு அது ஆறிப்போனதால் ஏமாற்றம் ஏற்பட்டது. போண்டாவை கையில் வாங்கிய அவர் “என்னப்பா.., போண்டா சூடாவே இல்லை?’ என்று கேட்டு இருக்கிறார்.

Advertisment

அதற்கு கடைக்காரர் நீங்கள் வரும்போதெல்லாம், போண்டா சுட்டா தரமுடியும் என்று கிண்டலடித்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கடைக்காரர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. உடனே அருகே இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி விலக்கியுள்ளனர்.

ஆனால் வாடிக்கையாளர் தாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று, சூடாக போண்டா தராத, டீக்கடைக்காரர் மீது புகார் கொடுத்தார். போலீசார் டீக்கடைக்காரரை வரவழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் வாடிக்கையாளரை சமாதானப்படுத்தி, டீக்கடைக்காரரை எச்சரித்து அனுப்பிவைத்தனர்.