/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2761.jpg)
கடலூர் மாவட்டம், சிறுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயம்பெருமாள். இவரது மனைவி ஜோதி(79). ஐயம்பெருமாள் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். சிறுபாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டில் ஜோதி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், ஜோதியின் மூத்த மகளை, அதே ஊரைச் சேர்ந்த ஜெயவேல் என்பவருக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார். ஜெயவேலுவுக்கு தற்போது 59 வயதாகிறது. இத்தம்பதிக்கு தற்போது வாலிப வயதில் 2 மகன்கள் உள்ளனர். நேற்று மதியம் ஜெயவேல், மாமியார் ஜோதியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் அங்கு மாமியாரிடம் வரதட்சணையாக 50 பவுன் நகை, இரு சக்கர வாகனம் வாங்க 50 ஆயிரம் ரூபாய் பணம் கட்டாயம் தர வேண்டும் என்று கேட்டு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஜோதி, ஏற்கனவே மூணு ஏக்கர் நிலம் உங்களுக்கு வழங்கியுள்ளேன். தற்போது என்னிடம் பணம் நகை என்று எதுவும் இல்லை நானே வயதான காலத்தில் தனிமையில் வசித்து வருகிறேன். பணத்திற்கு நான் எங்கே போவேன் என்று கூறியுள்ளார்.
இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த ஜெயவேல், ஜோதி வசித்து வந்த கூரை வீட்டிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ளார். தீப்பற்றி எரிந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோதி, அலறியடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதையடுத்து வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தீயணைப்பு அலுவலர் சண்முகம் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருந்தும் ஜோதியின் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்த ஜோதி அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதி வீட்டை கொளுத்திய அவரது மருமகன் ஜெயவேலை உடனடியாக கைது செய்தனர். மேலும், அவரிடம் சிறுப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)