50 thousand people should be gathered to welcome Chief Minister Stalin! Minister I.Periyaswamy order

காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி அருகே இருக்கும் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதுபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் சார்பில்கலைஞர் அரங்கில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அவைத் தலைவர்களான காமாட்சி, மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் வரவேற்றார். இதில் மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

Advertisment

இதில் பேசிய அமைச்சர் ஐ பெரியசாமி, “காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதுபோல் நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள இருக்கிறார். நாளை காலை ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கிவிட்டு, அங்கிருந்து கார் மூலமாக காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தர இருக்கிறார். அதனால்மாவட்ட எல்லையான வேடசந்தூரில் சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும். அதற்காக ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியிலிருக்கும் கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து காந்திகிராமத்திற்கு முதல்வர் வரும்போது மற்ற சட்டமன்றத்தொகுதியில் இருக்கும் கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் சாலைகளில் இருபுறமும் நின்று முதல்வருக்கு மிகப் பிரமாண்டமாக வரவேற்பு கொடுக்க வேண்டும். நமது மாவட்ட அளவிலேயே கட்சி பொறுப்பாளர்கள் 20,000 பேர் இருக்கிறீர்கள். அதோடு தொண்டர்களையும் திரட்டி ஐம்பதாயிரம் பேர் முதல்வரை வரவேற்கும் அளவுக்குக் கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.

இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், எம்.பி.வேலுச்சாமி, மாவட்டத் துணைச் செயலாளர் நாகராஜ் பிலால், துணை மேயர் ராஜப்பா உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisment