
திருச்சி குமார வயலூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி குமாரவயலூர் கிராமத்தில் 9 ஆம் நூற்றாண்டு காலத்தில், இடைக்கால சோழர்களால் இக்கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. திருவண்ணாமலையில் 15 ஆம் நூற்றாண்டில் பிறந்த அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இக்கோவில், முருக பக்தர் கிருபானந்த வாரியாரால் புகழ் பெற்றது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் கும்பாபிஷேகம் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக சுமார் ரூ.30 கோடி செலவில் திருப்பணிகள் நடந்து வருகிறது.
எனவே தைப்பூசை திருவிழா இன்று தீர்த்தவாரியோடு வழக்கம் போல நடைபெறவில்லை. இங்கு திரண்ட பக்தர்கள் மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமியையும், அதன் அருகே மற்றொரு கர்ப்ப கிரகத்தில் உள்ள ஆதிநாதர் மற்றும் அவரது துணைவி ஆதிநாயகி வடிவிலான சிவபெருமானையும் வழிபட்டு சென்றனர். நிகழ்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்