/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/wdwe_16.jpg)
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில்,அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த உத்தரவிடக்கோரிதமிழக அரசு தொடர்ந்த வழக்கில், வரும் 22 -ஆம் தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவபடிப்புகளுக்கான,அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான இடங்களைதமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இளங்கலை படிப்பிற்கு (எம்.பி.பி.எஸ்.,மற்றும் பி.டி.எஸ்.) 15% இடங்களும், முதுகலை படிப்பிற்கு (எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்., மற்றும் டிப்ளமோ படிப்பு) 50% இடங்களும், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்,மத்திய அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது.
இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில், எஸ்.சி/எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகள் தவிர, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டு முறையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படுவது கிடையாது. மற்ற அனைத்து இடங்களையும் பொதுப் பிரிவாக அறிவித்து, மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய, சட்டப்பூர்வமான இடஒதுக்கீட்டு அடிப்படையிலான வாய்ப்புகள்மறுக்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு, திமுக, பாமக, மதிமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமானது, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியிரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுமனு தொடர்பாக வரும் 22-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும்,இதே கோரிக்கையுடன் மதிமுக தொடர்ந்த மனுவிற்கும் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்குகளுடன் இணைத்து, வரும் 22- ஆம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)