
சென்னை கே.கே நகரில் உள்ள பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது, ஆன்லைன் வகுப்பில் தகாத முறையில் நடந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அப்பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு போலீசாரால் விசாரிக்கப்பட்டுவருகிறார்.
இந்நிலையில், ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளை ஆசிரியர் ராஜகோபாலன் படம் பிடித்து ஆபாசமாக ரசித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறையிலடைக்கப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனை அசோக் நகர் மகளிர் போலீசார், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர். 5 மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், ஒவ்வொரு புகாருக்கும் 50 கேள்விகள் தயாரிக்கப்பட்டு அதற்குப் பதில் அளிக்கும்படி விசாரித்துள்ளனர். மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிந்தே நடந்ததா? மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிட்டது ஏன்? என்பன போன்ற கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணையின்போது ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பிற்கு வரும் மாணவிகளை ஜூம் (zoom) செய்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்தது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இன்று (04.06.2021) மாலை 3 மணிவரை விசாரணை நடத்தி, அவரிடமிருந்து வாக்குமூலம் பெற்றவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் ஆசிரியர் ராஜகோபாலனை சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அதேபோல், அப்பள்ளியின் முதல்வர், தாளாளர் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகாரில் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது பற்றி கீழ்ப்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் ஆஜரான பள்ளி முதல்வர் கீதா, தாளாளர் ஷீலா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.