ADVERTISEMENT

சேலம்: கரோனா தொற்றால் 50 பேர் உயிரிழப்பு

05:00 PM Aug 04, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டாலும், பரவலின் வேகம் முன்னெப்போதையும் விட தற்போது தீவிரம் அடைந்துள்ளது.

ஆகஸ்ட் 3ஆம் தேதி நிலவரப்படி, மாவட்டம் முழுவதும் 3,868 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இவர்களில், 374 பேர் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சேலத்துக்கு வந்தவர்கள்.

கடந்த ஜூன் 13ஆம் தேதி, சேலம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவரின் மனைவி முதன்முதலாக கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தார். ஆக., 3ஆம் தேதி வரை இம்மாவட்டத்தில் மொத்தம் 50 பேர் பலியாகி உள்ளனர். ஒருபுறம் நோய்த்தொற்றின் வேகமும் அதிகரித்துள்ளது; மற்றொருபுறம் ஒன்றரை மாதத்திற்குள் கரோனா பலிகளின் எண்ணிக்கையும் 50 ஆக உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் கரோனா பலிகள், பொதுமக்களிடையேயும் சற்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கரோனா மட்டுமின்றி நீரிழிவு நோய், இருதய நோய், சுவாசப்பிரச்னைகள், காச நோய், உயர் ரத்த அழுத்தம், சீறுநீரக பிரச்னை உள்ளிட்ட வேறு பல தொந்தரவுகளாலும் பாதிக்கப்பட்டு இருந்தது மருத்துவர்கள் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

தற்போதுவரை சேலம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 3,051 பேருக்கு கரோனா கண்டறிவதற்கான சளி தடவல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 58 இடங்கள், நோய்த் தொற்று பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கரோனாவால் உயிரிழந்தவர்கள் வசித்த பகுதிகளில் நோய்த்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கபசுர குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்க வேண்டும். அல்லது, அரசு மருத்துவமனையில் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT