
பயணவழி உணவகங்களான மோட்டல் என்றழைக்கப்படும் உணவகங்களில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக பயணிகள் தரப்பில் இருந்து அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது வழக்கம். அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் ஒரு ஹோட்டலில் உணவுப் பொருட்கள் தரமற்ற நிலையில் இருப்பதாகவும், அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் பொதுமக்கள், பயணிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாமண்டூர் மோட்டலில் அரசு பேருந்துகள் நிற்க தடை விதித்திருந்தார். அதேபோல் தரமான உணவுகளை வழங்கும் புதிய ஹோட்டல்களை அமைக்க தீவிரம் காட்டி வருவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் விக்கிரவாண்டி அருகே தரமற்ற உணவுப் பொருட்களை விற்ற ஐந்து பயணவழி தனியார் உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க வேண்டாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா, அரிஸ்டோ ஆகிய ஐந்து உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றது ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சரின் வழிகாட்டுதல்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.