/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2024-08-29 at 2.38.31 PM.jpeg)
நீட் தேர்வால் மருத்துவக் கனவில் இருக்கும் குழந்தைகளின் உயிர்களைப் பறிகொடுத்துவிடாமல் தடுக்கும் விதமாகத் தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்துச் சிறப்புக் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுஆய்வுகள் செய்து 10% உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கூறிய நிலையில் அரசு7.5% உள் இடஒதுக்கீடு வழங்கியது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த மசோதா தாக்கலாகும் போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்தோடு ஆதரவளித்து வரவேற்றனர்.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மாளிகை காலம் தாழ்த்திய போது இப்போதை ஆளுங்கட்சியும் அப்போதைய எதிர்க்கட்சியுமான திமுக உடனே ஒப்புதல் அளிக்கக் கோரி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் அறிவித்த நிலையில் இதற்கும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் கிடைத்ததால் ஆளுநர் மாளிகை ஒப்புதலும் கிடைத்தது. அதற்குள் பல மாணவர்கள் பலியாகி இருந்தனர். அந்த காலகட்டத்தில் அதாவது, 2018 ல் 5 அரசுப் பள்ளி மாணவர்களும், 2019 ல் 6 அரசுப் பள்ளி மாணவர்களுமே மருத்துவம் படிக்கத் தேர்வாகி இருந்தனர்.
2020 - 2021 கல்வி ஆண்டில் 7.5% உள் இட ஒதுக்கீடு கிடைத்த பிறகு அரசுப் பள்ளி கிராமப்புற மாணவ, மாணவிகள் 2020-2021 ல் 435 பேருக்கும், 2021-2022 கல்வியாண்டில் 555, 2022-2023 கல்வி ஆண்டில் 584, 2023-2024 கல்வியாண்டில் 625 பேருக்கும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. இந்த கல்வியாண்டில் 622 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மட்டும் கடந்த ஆண்டுகளில் 19 மாணவிகள் மருத்துவம் படிக்கச் சென்றுள்ள நிலையில் இந்த ஆண்டு 4 மாணவிகள் தேர்வாகி உள்ளனர். அதாவது 7.5% உள் இட ஒதுக்கீடு கிடைத்த பிறகு கடந்த 5 ஆண்டுகளில் 23 மாணவிகள் தேர்வாகி தொடர் சாதனையைத் தக்க வைத்துள்ளனர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து இந்த ஆண்டு 31மாணவ, மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ் படிக்கவும், 6 மாணவ, மாணவிகள் பி.டி.எஸ் படிக்கவும் மொத்தம் 37அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவு நினைவாகி உள்ளது. இது கடந்த காலங்களைவிட அதிகமானது. இதில், வயலோகம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் படித்த கிராமப்புற கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளான உணவகத் தொழிலாளி மகள் ஆர்த்தி, தச்சுத் தொழிலாளி மகள் சுபஸ்ரீ, ஓட்டலில் வேலை செய்யும் தொழிலாளி மகன் சுதாகர், பட்டாவே இல்லாத அண்ணாநகர் கிராமத்தைச் சே்ந்த 100 நாள் வேலை, கோழி இறைச்சிக்கடை தொழிலாளி மகன் கடல்வேந்தன், முடிதிருத்தும் தொழிலாளியின் மகளான ஜெயந்தி ஆகிய 5 மாணவ, மாணவிகளும் ஒரே நேரத்தில் பல்வேறு மருத்துவக்கல்லூரிகளில் படிக்கத் தேர்வாகி இருப்பதால் வயலோகம் கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
நேற்று அந்த 5 மாணவ, மாணவிகளையும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி கிராம பொது மக்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு அழைத்து சால்வை அணிவித்து பதக்கங்கள், பரிசுகள் வழங்கி கௌரவப்படுத்தி மகிழ்ச்சியடைந்தனர். இந்த மானவர்கள் மற்றும் அவரது கூலித்தொழிலாளி தந்தைகளின்கனவை நினைவாக்கியது 7.5% உள் இட ஒதுக்கீடு தான் என்கின்றனர் பெற்றோர்களும் மாணவர்களும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)