5 relatives of the same family were lost in a car accident near Barangippet

Advertisment

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அன்வர்(56). இவரது உறவினர் ஒருவர் உடல்நலக் குறைவால் துபாயில் இருந்து அழைத்து வரப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக உறவினர்களுடன் ஒரு காரில் சென்னை சென்றுள்ளார்.

சென்னையில் சிகிச்சை பெற்று வருபவரைப் பார்த்து விட்டு மீண்டும் முகமது அன்வர் தனது உறவினர்களுடன் ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருந்தார். இவர்கள் வந்த காரை தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்த யாசர்அராபத்(38) என்பவர் ஒட்டி வந்துள்ளார். காரில் நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஹாஜிரா பேகம்(62), திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஹராபத் நிஷா (27), அவரது குழந்தை அப்னான்(3) ஆகியோர் பயணம் செய்துள்ளனர்.

கார் இன்று (செப்.12) அதிகாலை 3 மணி அளவில் சிதம்பரம் அருகே உள்ள பு.முட்லூர் மேம்பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் காரில் சிக்கியவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த உடன் லாரி ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். விபத்து நடந்த நெடுஞ்சாலை மேம்பாலம் ஒருவழிப் பாதையாக இருக்கிறது. ஆனால் போதிய எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்பு கட்டைகள் வைக்கவில்லை. ஆனால் விபத்து நடந்த உடன் நெடுஞ்சாலைத் துறையினர் அவசர அவசரமாக தடுப்பு கட்டைகளை அமைத்தது குறிப்பிடத்தக்கது.