/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sase3.jpg)
சேலத்தில் ரியல் எஸ்டேட் தாதாவை கடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 ரவுடிகள் மீதும் ஒரே நாளில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சேலம் அருகே உள்ள தளவாய்பட்டி ஏரிக்கரையைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 29), அன்னதானப்பட்டி மூணாங்கரடு பகுதியைச் சேர்ந்த மணிமாறன் (வயது 32), அன்னதானப்பட்டி கந்தப்பா காலனியைச் சேர்ந்த யுவராஜ் (வயது 33), கருப்பூர் கொல்லப்பட்டி புதூரைச் சேர்ந்த கவுதம் (வயது 30), சேலம் குகை நெய்மண்டி அருணாச்சலம் சாலையைச் சேர்ந்த நவீன்குமார் (வயது 33) ஆகிய 5 ரவுடிகளும் ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் ஐந்து பேரையும் சேலம் மாநகரக்காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோதா நவ. 17ஆம் தேதிகுண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி ஐவரும்ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது.
கடைசியாக இவர்கள், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ரவுடி பூபதி, அவருடைய நண்பர் பிரவீன்குமார் ஆகிய இருவரையும் நவ. 11ஆம் தேதி கடத்திச் சென்றனர். அவர்கள் இருவரையும் பிளாஸ்டிக் பைப் மற்றும் அரிவாளால் சரமாரியாகத்தாக்கியுள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபர் ஏகாம்பரம் என்பவரின் தூண்டுதலின் பேரில்இவர்கள் ஐந்து பேரும் பிரவீன்குமாரையும், ரவுடி பூபதியையும் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இச்சம்பவம் தவிர கத்தி முனையில் வழிமறித்து பணம், நகைகளைப் பறித்ததாகவும் இவர்கள் மீது வேறு பல வழக்குகளும் உள்ளன.தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததோடு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்ததால் அவர்கள் ஐந்து பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்களில் பிரபாகரன் என்பவர் ஆள்கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு வந்துள்ளார். அவர் மீது தற்போது மூன்றாவது முறையாகவும்மணிமாறன், யுவராஜ், கவுதம், நவீன்குமார் ஆகிய நான்கு பேர் மீதும் முதல் முறையாகவும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் 5 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலம் மாநகரில் உள்ள ரவுடிகளிடையே கிலியை ஏற்படுத்தி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)